கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷுக்கு அமைச்சர் மற்றும் சபாநாயகருடன் உள்ள தொடர்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 கோடி ரூபாய் தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்திப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமையும், சுங்கத்துறையும் வழக்கை விசாரித்து வரும் நிலையில் ஸ்வப்னா உடன் தொடர்பில் இருந்த முன்னாள் அரசு முதன்மை செயலாளர் சிவசங்கர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். போலி சான்றிதழ் கொடுத்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுத்து ஸ்வப்னாவை சிவசங்கரன் பணியில் அமர்த்தியது அம்பலமானது.
இந்த நிலையில் ஸ்வப்னாவுடன் உயர் கல்வித் துறை அமைச்சர் ஜலீல் ஒன்பது முறை செல்போனில் பேசியதன் பதிவு, என்ஐஏ வசம் சிக்கியுள்ளது. ரமலான் நோன்பு காலத்தில் அமீரகத்தில் இருந்து வரும் தொகுப்பை வாங்க ஸ்வப்னாவுடன் பேசியதாக அமைச்சர் ஜலீல் கூறியுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பொருட்களை உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதியுடன் பெறவேண்டிய நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் இது பற்றி ஸ்வப்னாவிடம் பேசியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப்போல் ஸ்வப்னாவின் கூட்டாளியான சந்திப் நாயரின் நிறுவனத்தை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணர் திறந்து வைத்ததும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
கடத்தல் தங்கம் பிடிபட்டதும் முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்த சிபாரிசு அழைப்புகளும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தை பயன்படுத்தி நடந்த தங்க கடத்தல் கேரளாவில் ஆட்சியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின் பேசிய மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கேரளாவிற்கு கடத்தல் தங்கம் வந்தது காவி மற்றும் பச்சை வண்ணங்களில் தான் என்றும் சிவப்பு வண்ணத்தில் அல்ல என்றும் மறைமுகமாக பாரதிய ஜனதாவை சுட்டிக்காட்டியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.