வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடு கட்டித்தரும் திட்டம்

வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடு கட்டித்தரும் திட்டத்தை நிறைவேற்ற போவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் என்று அழைக்கப்படும் உயர்நிலை அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

 

அப்போது பேசிய அவர் கொரொனாவுக்கு எதிரான போரை மக்கள் இயக்கமாக மாற்றியதால் இந்தியாவில் உயிரிழப்பு குறைந்திருப்பதாகவும், பிற உலக நாடுகளில் இருப்பதைவிட இந்தியாவில் மருத்துவம் மற்றும் சுகாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

 

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தேவையான உதவிகள் மற்றும் மருந்துகளை இந்தியா வழங்க இருப்பதாகவும் பிரதமர் கூறினார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளின் போது தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் தற்போது 6 லட்சம் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

 

மக்கள் சுகாதாரமாக வசிக்க நாடு முழுவதும் சுமார் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதாகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நெகிழி பயன்பாட்டை இந்தியா கணிசமாக குறைந்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நாட்டில் 83 கோடி பேர் பயன் அடைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர், கடந்த ஆறு ஆண்டுகளில் தொடங்கப்பட்ட 40 கோடி வங்கிக் கணக்குகளில் 22 கோடி வங்கி கணக்குகள் பெண்களுக்காக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இந்தியாவின் வாழ்வாதார கட்டங்களில் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏழு கோடி பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் சுய உதவி குழுக்கள் மூலம் பலரது வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

பெண்களுக்கு அதிகாரம் வழங்கி இருப்பதால் மாநில அரசுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முக்கிய பிரதிநிதிகளாக அங்கம் வகித்து நாட்டின் வளர்ச்சிக்கு கை கொடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமைதி ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட ஐ.நா அமைப்பு தற்போது கொரொனாவுக்கு எதிரான போருக்காக சீர்திருத்தங்களுடன் மறுபிறப்பு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் பிரதமர் கூறினார்.

 

ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் நிலையில் ஐநாவின் அனைத்து திட்டங்களுக்கும் இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.


Leave a Reply