கோயம்புத்தூரில் காதலிக்க மறுத்த பெண் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரூர் ஆரம் கார்டனை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகள் ஐஸ்வர்யா கொல்லப்பட்டவர் ஆவார். தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவரும், அதே பகுதியில் சிறு, குறு தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரித்தீஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா குடும்பத்தினருக்கு ரித்தீஷை கண்டித்துள்ளனர். இதையடுத்து ரித்திஷிடம் பேசுவதை ஐஸ்வர்யா நிறுத்திக் கொண்டு உள்ளார். தொடர்ந்து காதலிக்கவும் மறுத்துவிட்டார். ஆனாலும் காதலிக்க வற்புறுத்த வந்த ரித்தீஷ் ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
வெளியே வந்த ஐஸ்வர்யாவை வயிறு மற்றும் மார்பில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க வந்த அவரது தந்தை சக்தி வேலையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். கத்தி குத்தில் படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலையில் ஐஸ்வர்யா உயிரிழந்துவிட்டார்.
ஆபத்தான நிலையில் சக்திவேல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பேரூர் காவல் நிலையத்தினர் தப்பியோடிய ரித்திஷை தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த பெண் குத்திக் கொல்லப்பட்டது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் அண்மைக்காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது.