கந்தசஷ்டி அவதூறு விவகாரம் :கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு நள்ளிரவில் “சீல்” வைத்த போலீசார்!!

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதுறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னையில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு நள்ளிரவில் போலீசார் சீல் வைத்தனர்.

 

தமிழ் கடவுள் முருகன் புகழ் பாடும் கந்தசஷ்டி கவசம் குறித்து யூட்யூப்பில் அவதூறு வீடியோ வெளியிடப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தமிழகம் முழுவதும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தொடர்ந்து தமிழ் கடவுள்களை இழிவாக விமர்சிக்கும் கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் அமைப்பின் நிர்வாகி சுரேந்திரன் என்பவர் நேற்று புதுச்சேரியில் காவல்துறையினர் முன் சரணடைந்தார். தொடர்ந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 30-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் சென்னை வேப்பேரியில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். அலுவலகத்தில் சோதனை நடத்தி யூட்யூப் வீடியோ வெளியிட்டது தொடர்பான சில ஆவணங்கள், வீடியோக்களை கைப்பற்றியதுடன் அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர்.

 

இதற்கிடையே புதுச்சேரியில் நேற்று சரண் அடைந்த சுரேந்திரனை கைது செய்த தமிழக போலீசார், சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வருவது அறிந்து பாஜகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொரோனா ஊரடங்கை மீறி கூட்டம் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததாக பாஜகவினர் 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply