சென்னையில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த பல நாட்களாக பொது இடங்களில் தலைகாட்டாமல் இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தனது கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த மார்ச் 24-ந் தேதி முழு ஊரடங்கு போடப்பட்டது. இதனால் ஏழை , நடுத்தர மக்கள் வேலையிழந்து வருமானம் இழந்து தவித்த நிலையில் அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் ரொக்கமாக வழங்குமாறு அரசுக்கு மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தார். ஆனால் தமிழக அரசு ரூ.1000 மட்டுமே வழங்கியதுடன் , ரேசன் பொருட்கள் இலவசம் என்று அறிவித்தது.
இது போதாது என்று அரசை குறை கூறிய மு.க.ஸ்டாலின், ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்க திமுகவினருக்கு உத்தரவிட்டார். இதற்கு தமிழக அரசுத் தரப்பல் முட்டுக்கட்டை போடப்பட்டது. ஆனாலும் தமிழகம் முழுவதும் திமுகவினர் களத்தில் இறங்கி விறுவிறுப்பாக நிவாரண உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலினும் சென்னையில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏவும், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன், கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அத்தனை திமுகவினரையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது.
இதனால் கடந்த ஜுன் முதல் வாரம் முதல் ஒன்றிணைவோம் வா திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கியப் புள்ளிகள் வெளியில் தலை காட்டுவதையும் தவிர்த்தனர். மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது, தனது கருத்துக்களை வீடியோ பதிவாக வெளியிடுவது என தனது யுக்தியை மாற்றினார்.
இதனால் வீட்டில் இருந்து கொண்டு, அரசை விமர்சித்து அறிக்கை மேல் அறிக்கை விட்டு கொரோனா காலத்திலும் அரசியல் செய்கிறார் என மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் உதயகுமார், ஜெயக்குமார் போன்றோர் விமர்சித்தனர்.