கன்னிவெடியை மிதித்த சிறுவனின் கால் சிதறியது..!
விழுப்புரம் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை குறிவைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் கால் சிதறி துண்டிக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த இளம் பருதி என்ற 17 வயது சிறுவன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறான்.
செவ்வாயன்று மாலை அருகே உள்ள மட்டபாறை ஏரி அருகே தங்களது வயலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து உள்ளார். மட்டபாறை ஏரி பகுதியில் நடந்து வந்தபோது இளம்பரிதி எதையோ மிதித்துள்ளான். அப்போது பயங்கர சத்தத்துடன் அது வெடித்துள்ளது. வலது கால் சிதறி கணுக்கால் துண்டிக்கப்பட்டது. மாணவன் ரத்த வெள்ளத்தில் சரிந்து உள்ளான்.
பயங்கர வெடி சத்தத்தையும் , மாணவனின் அலரலையும் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து அவரை மீட்டுள்ளனர். வலது கணுக்கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அனந்தபுரம் காவல்துறையினரும் தடயவியல் குழுவினரும் நடத்திய விசாரணையில் மாணவர் விதித்தது கன்னிவெடி என்பது கண்டறியப்பட்டது.
விளைநிலங்களில் நுழையும் காட்டுப்பன்றிகளை விரட்ட கன்னி வெடி வைக்கப் பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறினர். இரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் நாய் ஒன்று தலை சிதறி கிடந்ததாக கிராமத்தினர் கூறினர். கன்னிவெடி என்ற தகவலால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தடைசெய்யப்பட்ட கண்ணிவெடியை பயன்படுத்தியது யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினர் முனைப்புடன் விசாரித்து வருகின்றனர்.






