வனத்துறையினரின் நீண்ட போரோட்டத்திற்கு பின்பும் சிறுமுகையில் மேலும் ஒரு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட புதுக்காடு பகுதியில் 2 வயது ஆண் யானை உடல் நலமின்றி படுத்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதன்பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானைக்கு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் படி வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக்குழு தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தானாகவே வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.எனினும்,யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் சிகிச்சையளிக்கப்பட்ட யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலையில் யானை எவ்வித அசைவும் இன்றி படுத்திருப்பதை கண்ட வனத்துறையினர் அதன் அருகில் மேலும் பல யானைகள் நின்றிருந்ததை அடுத்து அருகில் செல்ல முடியவில்லை.சில மணி நேரங்களுக்கு பின்பு யானையின் அருகில் சென்று பார்த்த பொழுது எவ்வித அசைவுமின்றி படுத்திருப்பதை அறிந்தனர்.
இதுகுறித்து வனத்துறை மருத்துவக்குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்து யானையை பரிசோதித்து பார்க்கையில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனவிலங்குகளின் உணவுத்தேவைக்காக வனப்பகுதியிலேயே விடப்பட உள்ளது.கோவை வனக்கோட்டத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்திருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






