சாத்தான்குளம் சம்பவம் : சிபிசிஐடிக்கு “சபாஷ்” போட்ட உயர்நீதிமன்ற கிளை… ஜெயராஜின் மகளும்- நீதிமன்றம், தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு நன்றி!!
சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது எனவும் 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தமிழக காவல்துறையினர் நீதியை நிலை நாட்டி உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சபாஷ் தெரிவித்துள்ளனர்.
“இதேபோல் உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சியும் நியாயத்தை நிலைநாட்டிய உயர் நீதிமன்றத்திற்கும், காவல்துறையை துரிதமாக செயல்பட வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.”
சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர், போலீசாரின் சித்ரவதையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த பிரச்னையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவுகளால், சிபிசிஐடி விசாரணை துரித கதியில் நடந்து வருகிறது.

இருவரின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜ் ஆகிய 5 காக்கிகள் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து வேகம் எடுத்து வருகிறது.
“சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சிபிசிஐடி போலீசார் நீதியை நிலைநாட்டும் வகையில் செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்தனர்.”
மேலும் இந்த விவகாரத்தில் துணிச்சலாக சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியிடம் செல்போன் மூலம் மேலும் விசாரணை நடத்திய நீதிபதிகள், அவரின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதுடன் வழக்கையும் ஒத்தி வைத்தனர்.
இதேபோல் உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சியும், தனது தந்தை மற்றும் சகோதரனின் மரணத்தில் நியாயத்தை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் எங்களுக்கு பக்கபலமாக இருந்த அத்துணை தரப்பு தமிழக மக்களுக்கும் குறிப்பாக இந்த விவகாரத்தில் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அத்தனை மீடியாவுக்கும் நன்றி எனவும் தெரிவித்த பெர்சி, காவல்துறையை துரிதமாக செயல்பட வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.






