போலீசாரை எட்டி உதைத்த அதிமுக முன்னாள் எம்பி!
சேலம் அருகே சுங்கச்சாவடியில் அதிமுக முன்னாள் எம்பி அர்ஜுனனை போலீசார் நிறுத்தி விசாரித்தபோது தகராறு ஏற்பட்ட நிலையில் அவர் காவல் உதவி ஆய்வாளரை காலால் எட்டி உதைக்க முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது, சேலம் அழகாபுத்தூரை சேர்ந்த அர்ஜுனன் தர்மபுரி தொகுதி எம்பி ஆக ஒரு முறையும், தாரமங்கலம் தொகுதி எம்எல்ஏவாக இரண்டு முறையும் பதவி வகித்துள்ளார்.
நேற்று இரவு 7 மணி அளவில் சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் இருக்கும் சுங்க சாவடி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு வாகன தணிக்கையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அர்ஜுனன் வந்த காரை நிறுத்தி எங்கு செல்கிறீர்கள், அடையாள அட்டை காண்பியுங்கள் என கேட்டுள்ளார்.
அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் லேசான கைகலப்பு ஏற்பட்டது. அப்போது முன்னாள் எம்பி அர்ஜுனன் காவல் உதவி ஆய்வாளரை எட்டி உதைக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.






