--- --:--:-- --

நாளையுடன் முடிகிறது 99 நாள் ஊரடங்கு… ஜூலை மாதத்தில் நீட்டிப்பா? தளர்வா? முதல்வர் எடப்பாடி முக்கிய ஆலோசனை!!

7.3

கொரோனா பீதியில் 99 நாட்களாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது.இந்நிலையில் கொரோனா பரவல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமெடுத்துள்ள நிலையில் ஜூலை மாதத்திலும் ஊரடங்கை தொடர்வதா? அல்லது மேலும் தளர்வுகளை அறிவிப்பதா? என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை முடிவில் முக்கிய முடிவுகளையும் அறிவிப்பார் என்று தெரிகிறது.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் காலடி வைக்கத் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந் தேதி 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாட்டின் அனைத்து செயல்பாடுகளும் ஒட்டு மொத்த முடக்கத்திற்கு சென்றது. பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகள் அடியோடு ரத்து செய்யப்பட்டன. அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டன.

 

வரலாற்றில் இதுநாள் வரை கண்டிராத இந்த பொது முடக்கத்தால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் வேலையிழப்பு, வருமான இழப்பு, பொருளாதார முடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு வேறு பல பிரச்னைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. இதில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை தான் பெரும் திண்டாட்டமாகி விட்டது.

 

ஆனாலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் தான் தொற்று பரவல் நாட்டில் மெல்ல மெல்ல வேகமெடுக்கத் தொடங்கியது. இதனால் அடுத்தடுத்து ஊரடங்கு 4 முறை நீடிக்கப்பட்டது. இடையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு தொழில்கள் இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் கொரோணா பரவல் இப்போது விஸ்வரூபம் எடுத்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து தற்போது தினமும் 20 ஆயிரம் பேர் வரை பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையும், உயிரிழப்பும் தினசரி 400, 500 என பதிவாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. மொத்த உயிரிழப்பும் 16,487 ஆக உயர்ந்துள்ளது.

 

இதில் இந்தியாவிலேயே மோசமான பாதிப்புக்கு ஆளான மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தியாவின் மொத்த பாதிப்பில் 70 % இந்த 3 மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்று பாதிப்பில் 3-வது இடத்தில் இருந்தாலும் உயிரிழப்பு விகிதம் மிக குறைவாக இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. இன்று வரை மொத்த பாதிப்பு 82 ,275 ஆகவும், உயிரிழப்பு 1079 ஆகவும் உள்ளது.

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு பல மடங்காக உயர்ந்து தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரைத் தொடர்ந்து மதுரை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், வேலூர், தேனி, சேலம் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதும் குறிப்பிடத்த்கது.

 

தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் நாளையுடன் முடிவடையும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டியது அவசியம் என்பதையே பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பரவல் அதிகரித்துள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க ேவண்டும் என்றும் குரல்கள் எழுந்து வருகிறது.

 

இந்நிலையில் தான் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை முடிவில் ஊரடங்கு நீட்டிப்பது, அதில் முழு ஊரடங்கு எந்தப் பகுதிகளில் அமல்படுத்துவது, என்ன மாதிரி மேலும் தளர்வுகள் என்பது குறித்த அறிவிப்பையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon