--- --:--:-- --

மாஞ்சா நூலில் பட்டம் விடுபவர்களை டிரோன் மூலம் கண்காணிக்கும் காவல் துறை!

12

பொது முடக்க நேரத்தில் சென்னையில் பட்டம்விட்டு பொழுதை கழிப்பது அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் மாஞ்சா நூல் பட்டத்தால் 10 பேர் உயிரிழந்திருப்பது பட்டங்களை பயத்துடன் பார்க்க வைத்துள்ளது. சென்னையில் பட்டம் விட பயன்படுத்திய மாஞ்சா நூலால் கடந்த ஆறு ஆண்டுகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட 134 வழக்குகளில் 164 பேர் கைதாகி உள்ளதாக கூறுகிறது காவல்துறையின் புள்ளிவிவரம். மாஞ்சா நூல் பட்டம் மனித உயிர்களை காவு வாங்க தொடங்கியதால் 2007 ஆம் ஆண்டு அதனை உயர்நீதிமன்றமும் சென்னை காவல் துறையும் தடை செய்தது.

 

ஆனால் இந்த பொது முடக்க காலத்தில் காவல் துறைக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகின்றன மாஞ்சா நூல் பட்டங்கள். பொது முடக்க நேரத்தில் மாஞ்சா நூல் அழுத்ததில் சென்னையில் பல்வேறு இடங்களில் 10 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 

பட்டம் விடுபவர்களை கையும் களவுமாக பிடிக்க அயனாவரம், சூளைமேடு பகுதிகளில் உயரமான கட்டிடங்களில் இருந்து பைனாகுலர் மூலமும், டிரோன்கள் மூலமும் காவல்துறையினர் கண்காணிக்கிறார்கள்.

 

மாஞ்சா நூல் தயாரித்து வாட்ஸ்அப் மூலம் விற்பனை செய்த மூன்று பேரை சூளைமேடு போலீசார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். முடிவில்லாமல் பறந்து கொண்டிருக்கும் மாஞ்சா நூல் பட்டத்திற்கு காவல்துறை விரைவில் முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon