ஒடிஷா சூப்பர் ஸ்டார் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சி செய்த நபர் கைது!
கோவையில் ஒடிசா திரைப்பட சூப்பர் ஸ்டார் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். ஒடிசா திரைப்படத்துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சபசிஜி மிஸ்ரா வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் ஒடிசா மாநில தொழிலாளர்களை தன்னுடைய சொந்த செலவில் அழைத்துவர கடந்த சில நாட்களாக உதவி செய்து வருகிறார்.
இதனை அறிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பதால் குமார் தாஸ் என்பவர் தான் கோவையில் தவிப்பதாகவும் தனக்கு உதவுமாறும் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இதற்கும் சபசிஜி மிஸ்ரா பதில் தந்திருந்தார்.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டியியை சேர்ந்த கோபால் சென்ற நபர் பதால் குமார் சாசின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தான் சூப்பர் ஸ்டார் சபசிஜி மிஸ்ராவின் உதவியாளர் என்றும் தன்னிடம் 6,000 ரூபாய் வழங்கினால் சொந்த ஊருக்கு அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த தாஸ் நடிகரின் உதவியாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு தாங்கள் பணம் கேட்கவில்லை என்றும் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பதால் குமார் தாஸ் கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் தந்தார்.
காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் கோபால் தாசிடம் பணத்தை வீட்டில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். திட்டமிட்டபடி பணத்தை பெற்றுக்கொள்ள வீட்டிற்கு வந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் கோபால் சந்திரா தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






