ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் வழக்கில் உயர்நீதிமன்றத்தை நாட தமிழக காவல்துறைக்கு அறிவுரை!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆர்எஸ் பாரதியை கடந்த மாதம் 23 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த வழக்கில் ஆர்எஸ் பாரதிக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனை எதிர்த்தும் ஜாமீனை ரத்து செய்யக் கோரியும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் நாகேஸ்வரராவ், கிருஷ்ணமுராரி, ரவீந்திர பாட் முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கின் தீர்ப்பை ஏற்கனவே காலாவதியாகி விட்டதால் மனுவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தை நேரடியாக நாடியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி வழங்குவதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.






