70 ஆண்டுகளாக யாரும் தொடாத பிரச்சினைகளை நரேந்திர மோடி தீர்த்து வைத்துள்ளார்!
நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக யாரும் தொடாத பிரச்சினைகளை நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீர்த்து வைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்த படியே தேர்தலுக்கான மெய்நிகர் பரப்புரையை தொடங்கி வைத்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்கள் நலனுக்காக உயிரை பணையம் வைத்து சேவையாற்றும் மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு தலை வணங்குவதாக கூறினார்.
இது தேர்தல் பேரணி அல்ல தொற்றுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் பேரணி என கூறிய அமைச்சர்அமித்ஷா ஒரு கோடியே 80 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்துள்ளனர் என தெரிவித்தார்.
ஒரு காலத்தில் யார் வேண்டுமானாலும் எல்லை தாண்டிவந்து வீரர்களை தாக்கலாம் என்ற சூழல் நிலவியது என காங்கிரஸ் ஆட்சியை மறைமுகமாக சாடிய அமித்ஷா தற்போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தங்கள் எல்லையை பாதுகாக்கும் திறன் கொண்ட நாடு இந்தியா என்பதை உலகமே ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். கொரொனாவுக்கு எதிராக நாட்டு மக்களை ஒருங்கிணைத்த பெருமை பிரதமர் மோடியைச் சாரும் என கூறிய அமைச்சர் ஒரு நாடு ஒரு ரேஷன் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டார்.






