பாட்டி வீட்டிற்கு வந்த புது மாப்பிள்ளை வெட்டிக் கொலை.!!

ராணிப்பேட்டை : அரக்கோணம் அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் நள்ளிரவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் புது மாப்பிள்ளை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் படாளம் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன். இவர் படாளத்தில் கோழி பண்ணை நடத்தி வருகின்றார். இவரது மகன் பாரதி( வயது 24) என்பவர் வாலாஜாபாத் அடுத்த அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சங்கீதா ( வயது 19) என்ற பெண்ணை காதலித்து நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன் பாரதி, சங்கீதா இருவரும் அரக்கோணம் அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அதே பகுதியில் உள்ள அரிசி அரவை ஆலை அருகே நண்பர்களுடன் மது அருந்தியதாகவும் அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கை கலப்பாக மாறி அங்கிருந்தவர்கள் கத்தி மற்றும் கட்டை கொண்டு தாக்கியதில் குடிபோதையில் இருந்த பாரதி ரத்தகாயங்களுடன் சுருண்டு விழுந்தார்.

 

இதனை கண்ட நண்பர்கள் தலைமறைவாகினர். இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற பாரதி காலை வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் கிராமத்தில் தேடியபோது அரிசி அரவை ஆலை அருகே பாரதி தலையில் வெட்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த நெமிலி காவல்துறையினர் பாரதியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்கள். இறந்த இளைஞர் பாரதிக்கு திருமணமாகி நான்கு மாதங்களான ஆன நிலையில் கொலை செய்யப்படுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply