14 வயது சிறுமியை கோவையிலிருந்து கரூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இ பாஸ் மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவனும் சிறுமியும் இருசக்கர வாகனத்தில் 126 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார். எங்கு தேடியும் கிடைக்காததால் பதறிப்போன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் பள்ளியில் பயிலும் 17 வயது சிறுவன் சிறுமி சென்று இருப்பதை கண்டறிந்தனர்.
இருவரும் கரூரில் இருப்பதை அறிந்து அங்கு விரைந்தது காவல்துறை. சிறுவனின் பாட்டி வீட்டிலிருந்து சிறுமி மீட்கப்பட்டார். கோவையிலிருந்து இருசக்கர வாகனத்தில் சிறுமியை தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்ற சிறுவன் அங்கு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை காவல்துறையினர் கைதுசெய்தனர். மார்ச் 25ஆம் தேதி பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று முதல் இல்லாமல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு இ பாஸ் இல்லாமல் செல்ல முடியாது.
அப்படி இருக்கையில் இ பாஸ் மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்றி இரு சக்கர வாகனத்தில் 126 கிலோ மீட்டர் சிறுவனும் சிறுமியும் பயணித்தது எப்படி? வழியில் உள்ள மாவட்ட எல்லைகளில் காவல்துறையினரே இல்லையா போன்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது இந்த விவகாரம்.