--- --:--:-- --

கணவர் மற்றும் குழந்தை இருப்பதை மறைத்து 2-வது திருமணம் செய்த பெண்! 2 வது கணவனால் குழந்தை கொலை!

5

வேலூர் அருகே முதல் திருமணம் மற்றும் குழந்தை இருப்பதை மறைத்து இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் இரண்டு வயது குழந்தையை இரண்டாவது கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த சாந்தி என்பவரது மகள் லாவண்யாவும் கேவி குப்பத்தை சேர்ந்த கட்டிட வேலை செய்து வரும் பிரவீன் குமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் சீதாராம் பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் லாவண்யா தனது அக்காள் மகள் என்று கூறி இரண்டு வயதான ஒரு குழந்தை சபீனாவை அழைத்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் அந்த குழந்தைக்கு தலையில் அடிபட்டு இருப்பதாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அந்த குழந்தையின் தந்தை என்று கூறிய சக்திவேல் என்பவர் வேலூர் எஸ்பியிடம் புகார் அளித்தார்.

அவரது உத்தரவின்படி உடல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் குமாரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சக்திவேலும், லாவண்யாவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் சபீனா என்ற பெண் குழந்தை இருந்து வந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் ஓராண்டிற்கு முன் பிரிந்துவிட்டனர். லாவண்யா தனது குழந்தைகளுடன் வேலூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.

 

இந்த நிலையில் கட்டட வேலைக்கு சென்று கொண்டிருந்த லாவண்யாவும், கேவி குப்பத்தை சேர்ந்த பிரவீன் குமாருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. முதல் திருமணம் மற்றும் குழந்தை இருப்பதை மறைத்து கடந்த பிப்ரவரி மாதம் லாவண்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் கே வி குப்பம் சீதாராம் பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் மூன்று மாதங்களாக குழந்தையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இதையடுத்து தனது அக்காள் மகள் தாய் வீட்டில் இருப்பதாக கூறி குழந்தையை அழைத்து வந்துள்ளார். குழந்தையை எடுத்து வந்து நான்கு நாட்கள் ஆன பிறகு பிரவீன் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு குழந்தை யார் எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். சபீனா தனது முதல் கணவர் சக்திவேலுக்கு பிறந்தவள் என்றும் இது தன்னுடைய குழந்தை என்றும் லாவண்யா ஒப்புக்கொண்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சபீனாவை குடிபோதையில் தூக்கி சுவற்றில் அடித்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் திருமணத்தையும் குழந்தையையும் மறைத்து இரண்டாம் திருமணம் செய்ததன் மூலம் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon