இரண்டு ஏடிஜிபிக்கள் பெயரில் போலி கணக்கு..! அதிர்ச்சி!
தமிழகத்தில் ஏடிஜிபி அந்தஸ்தில் இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 2 பேர் தங்கள் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி நடைபெறுவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் காவல்துறையினரை கண்டு அஞ்சுவர்.
ஆனால் கணினிக்கு பின் மறைந்து கொண்டு களவாணித்தனம் செய்யும் சைபர் கிரிமினல்கள் உயர் காவல்துறை அதிகாரிகளின் பெயரிலேயே போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்யும் அளவுக்கு வந்துவிட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசில் ஏடிஜிபி ரவி மற்றும் மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டது.
அதனை அவர்கள் தங்களின் உண்மையான முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்கள் மூலம் அவர்கள் பெயரில் போலி கணக்கை வில்லன்கள் தொடங்குகின்றனர். உங்களின் கணக்கில் உள்ள நண்பர்கள் பட்டியல்தான் இவர்களின் இலக்கு. அந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு போலி கணக்கு மூலம் பிரண்ட் ரெக்குவஸ்ட் கொடுப்பார்கள்.

அதை அக்சப்ட் செய்து விட்டால் மெசஞ்சர் மூலம் சாட் செய்து மோசடியில் ஈடுபடுவார்கள். முன்பே நண்பராக இருப்பவர் எதற்கு மீண்டும் ரெக்குவஸ்ட் கொடுக்கிறார் என்றும் ஒரு உயர் அதிகாரி பொதுவெளியில் அதுவும் முகநூலில் பணம் கேட்பாரா எனவும் யோசித்தால் தப்பிவிடலாம் இல்லை என்றால் இல்லை தான் சிக்கல். சிக்கியவரிடம் எப்படியாவது பணத்தை பறித்துக் கொண்டு சைபர் கிரிமினல்கள் சைலன்ட் ஆகிவிடுவார்கள்.
குற்றங்களை அரங்கேற்றும் தளமாக சோஷியல் மீடியாக்கள் மாறிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார் ஏடிஜிபி ரவி. கிரிமினல்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தமது பெயரில் உள்ள போலி கணக்கு நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அட்டகாசம் செய்யும் வைரஸ் ஒருநாள் ஆன்டிவைரசிடம் அடிவாங்கும் அதை போல் எந்த டெக்னாலஜி திருடர்களும் நிச்சயம் ஒருநாள் காவல்துறையுடன் சிக்குவார்கள்.






