மகாராஷ்டிராவில் இருந்து வந்த மேலும் 3 பேருக்கு கரோனா: சிவகங்கை மாவட்டத்தில் பாதிப்பு 29 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு ஏற்கனவே கரோனா தொற்று இருந்தது. அவர்கள் அனைவரும் குணமடைந்ததால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியது

 

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 700 -க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.  அவர்கள் காரைக்குடி அமராவதிப் புதூர் , சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

 

சிலதினங்களுக்கு முன்பு நடந்த பரிசோதனையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு மேலும் 3 பேருக்கு கரோனாதொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

 

இதில் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தைச் சேர்ந்த 33 வயது ஆண், இளையான்குடி நெஞ்சத்தூரைச் சேர்ந்த 45 வயது, மானாமதுரை விளாக்குளத்தைச் சேர்ந்த 38 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து  சிவகங்கை  மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.


Leave a Reply