தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரையில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வட தமிழகத்திலும் 104 முதல் 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பல நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. வசென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டது.
புதிய புயல் குறித்த அறிவிப்பில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக உருவாகும் என கூறப்பட்டுள்ளது. மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயலானது சென்னை கிழக்கு தென்கிழக்கு 670 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. கடும் சூறாவளி காற்றுடன் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுவதால் வருகிற 20-ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி வடக்கு திசை நோக்கி நகரும் போது தமிழக காற்றின் ஈரப்பதத்தை ஈர்க்கும் வாய்ப்புள்ளதால் வடதமிழகத்தில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நான்கு மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் விருதுநகர் மாவட்டம் கரியபட்டி 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.