சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிகாரிகள் ஆய்வுக்குச் சென்றபோது ரேஷன் கடை பூட்டியிருந்ததால், அக்கடைக்கு சீல் வைத்தனர். விசாரணையில் அக்கடையில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. மேலும் மாவு மில்லில் 520 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி கீழத்தெருவில் பாம்கோ ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்களை விநியோகிக்காமல் கடத்துவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனுக்கு புகார் வந்தது. ஆட்சியர் உத்தரவில் நேற்று முன்தினம் தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் ரேஷன் கடைக்கு ஆய்வுக்குச் சென்றார். ஆனால், கடை பூட்டியிருந்ததால், அக்கடைக்கு சீல் வைத்தார். மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் ரேஷன் கடையின் பின்பக்கக் கதவை உடைக்க ஒருவர் முயன்றார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை கோட்டாட்சியர் சுரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் காளிமுத்தன், வட்டாட்சியர் பாலாஜி, பாம்கோ மேலாண்மை இயக்குநர் திருமாவளவன், வட்ட வழங்கல் அலுவலர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.இதில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் நேற்றிரவு செஞ்சை பெருமாள் கோயில் அருகேயுள்ள தனியார் மாவு மில்லில் வட்டாட்சியர் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு 520 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கூறுகையில், ”பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா சிறப்புத் திட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படுகிறது. இதையடுத்து இம்மாதம் மே மாதத்திற்குரிய அரிசி, மே மாதத்திற்குரிய சிறப்புத் திட்ட அரிசி, ஏப்ரலில் விடப்பட்ட சிறப்புத் திட்ட அரிசியில் 50 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப 12 முதல் 212.5 கிலோ வரை வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் அரிசியை முறையாக வழங்காவிட்டால் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.