14 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய நிதி அமைச்சகம்!
கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 6,195 கோடியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு 1,277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் 6,195 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ஆயிரத்து 277 கோடியும், பஞ்சாப்புக்கு 638 கோடியும் மேற்கு வங்கத்தில் 418 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 335 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மேகலாவுக்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கொரொனா நெருக்கடியில் உள்ள மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் பதினைந்தாவது நிதி ஆணையம் பரிந்துரைத்த படி, இரண்டாவது தவணையாக 14 மாநிலங்களுக்கு 6 ஆயிரத்து 195 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான நேற்றைய ஆலோசனையின் போதே முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்திற்கு 2000 கோடி நிவாரண தொகையை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.






