தமிழக அரசின் மதுபான கடைகள் திறப்பு விபரீத முடிவை மறுபரிசீலனை செய்திட டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல் !

Publish by: மகேந்திரன் --- Photo :


தமிழக அரசு பாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளை 7 . 5 . 2020 முதல் திறக்க முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது . அரசின் இத்தகைய முடிவு கொரோன பரவல் தடுப்பு பணிகளை இதுவரை அரசு எடுத்த பணிகள் அனைத்தையும் சிதைத்துவிடும் என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சுட்டிக்காட்டுகிறது .

 

கொரோனா ஊரடங்கினால் மக்கள் உணவுக்கே அல்லல்பட்டு வரும் வேளையில் மத்திய அரசு மதுபான கடைகள் , பான்மசாலா கடைகளை திறக்க அனுமதித்திருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகும் .

 

தமிழக அரசு மதுபான கடைகளை திறப்பதற்கு அண்டை மாநிலங்களில் மது விற்பனையை சுட்டிகாட்டுவது ஏற்புடையதல்ல . இன்று அண்டை மாநிலங்களில் மதுபான கடைகளில் கொரோனா குறித்தான அச்சமோ , சமூக இடைவெளி குறித்தான விழிப்புணர்வோ இல்லாமல் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதியை அரசு கவனத்தில் எடுத்துகொள்ளவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது .

 

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மதுபான கடைகள் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையிலான கட்டமைப்பு இல்லாத நிலையில் தான் உள்ளன . அத்தகைய நிலையில் உள்ள கடைகளில் ஊழியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனையில் ஈடுபட முடியாத நிலையும் , குடிமக்கள் கும்பலாக குவிந்து வாங்கும் நிலையும் ஏற்படும்.

 

மேலும் மதுக்கூடங்கள் இயங்க அனுமதிக்காத நிலையில் குடிமக்கள் கடைக்கு அருகிலேயே மதுவை குடிப்பதும் , எச்சில் துப்புவதும் , வாந்தி எடுப்பதுமான சூழ்நிலையும் நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் .

மதுபான கடை ஊழியர்கள் பொது போக்குவரத்து இல்லாததால் வெளியூர்களிலிருந்து வந்து கடைகளில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வது , கடையின் விற்பனை பணத்தை வங்கியில் செலுத்துவது , மாவட்ட மேலாளர் அலுவலகங்களுக்கு சென்று வருவது , போன்ற அன்றாட பணிகளை மேற்கொள்வது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

 

ஊரடங்கினால் வேலையிழந்து , வருமானமில்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்கூட பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள கோடிக்கணக்கான மக்களில் குடிபழக்கத்திற்கு ஆட்பட்டுள்ள மக்களிடம் உள்ள பணத்தை குடிக்கு செலவழிக்க அரசு முயற்சிப்பது வெந்தப்புண்ணில் வேலை பாய்ச்சுவதாகும்.

 

மேலும் குடும்ப வன்முறையும் , சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் அதிகரிக்க செய்யும் என்பதை அரசின் கவனத்திற்கு சம்மேளனம் கொண்டு வருகிறது . மாநிலம் முழுவதும் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் ஊடரங்கு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை மதுபான கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியும் கூடுதலாக்கும்.

 

தமிழகத்தில் கொரோன நோய் தொற்று அதிகமாகி வரும் சூழ்நிலையில் மதுபான கடைகள் திறப்பு என்கிற விபரீத முடிவை மறுபரிசீலனை செய்து , மூன்றாம் கட்ட ஊரடங்கு காலம் முடியும் வரை மதுபான கடைகள் திறப்பு நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசை டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.


Leave a Reply