கர்நாடகாவில் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மதுவிற்பனை!
கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 45 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்று தீர்ந்து உள்ளன. 40 நாள் பொது முடக்கத்திற்கு பிறகு கர்நாடகாவில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டன. பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோர் மதுக்கடைகளில் குவிந்தனர்.
இதனால் நேற்று ஒரே நாளில் 45 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன . வரும் வாரத்தில் புதிதாக விற்பனையாகி வரும் மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி 6 சதவீதம் வரை அதிகரிக்க இருப்பதாக கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
40 நாட்களாக மதுபான கடைகள் மூடப்பட்டதால் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.ஆந்திர மாநிலத்திலும் மதுபானங்களின் விலை 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் மதுபானம் மீது 70 விழுக்காடு கொரொனா சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. சில்லரை கடைகளில் விற்பனை செய்யப்படும் மது மீது அதிகபட்ச விலை மீது இந்த வரி விதிக்கப்படுவதாகவும் இன்று முதல் வரி உயர்வு அமலுக்கு வருவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் 150 மதுக்கடைகள் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 40 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் கடைகள் முன்பு குவிந்தனர். முகக் கவசங்கள் அணியாமலும்,தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் குவிந்ததால் கரோல்பா, திரிலக்பூரி, முனிர்கா உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் வீடியோ வெளியிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்காவிட்டால் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.






