தொழில்துறையினர் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் வேண்டுகோள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக பனியன் மற்றும் அதன்சார்ந்த தொழில்துறையினருடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை 11 மணிக்கு நடந்தது.
 

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் பேசியதாவது:-தமிழ்நாடு முதலமைச்சர்  மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவுரைபடி, திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்று பரவாமல் முழுமையாக தடுப்பது குறித்து.,  தமிழக அரசால் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக.,  நிறுவனங்கள் மற்றும்  தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வருகை புரியும் இதர நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்திட  கீழ்வரும் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

 

1. கன்டெய்ன்மெண்ட் என்னும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைச் சார்ந்த எவரையும் பணியில் அமர்த்தக்கூடாது. தினமும் மாவட்டஆட்சியர் அலுவலகத்திலிருந்து கன்டெய்ன்மெண்ட் என்னும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை எவை என்பது குறித்து அறிக்கை பெற்று அதனை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் நுழைவு வாயிலில் அனைவரும் பார்க்கும்படி ஒட்டப்பட வேண்டும்.

 

2. பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்கள் மருத்துவரீதியாக பரிசோதிக்கப்பட்டு கொரோனா நோய்த்தொற்று அற்ற தகுதி வாய்ந்த நபர்களை மட்டுமே பணியில் அமர்த்திட வேண்டும்.

 

3. பணிக்கு வரும் பணியாளர்களுக்கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனிவாயில்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா நோய்தொற்று உள்ளதா என்பதை கண்டறிந்த பின்னரே பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

 

4. பணியாளர்கள் அவர்களது வீட்டிலிருந்து நிறுவனத்திற்கு வரும்பொழுது அவர்களது உடல்நிலை குறித்து அவர்களே சுய பரிசோதனை மூலம் பரிசோதித்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

 

5. பணியாளர்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஏதேனும் கண்டறியப்படின் அருகிலுள்ள அரசு மருத்துவ முகாமிலுள்ள மருத்துவர்களை கொண்டு பரிசோதித்து அவர்களை 14 நாட்கள் அவர்களது இல்லத்திலேயே தனிமைப்படுத்திட அறிவுறுத்துவதோடு, அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட வேண்டும்.  55 வயதுக்கு மேலுள்ள பணியாளர்கள் மற்றும் 05 வயதிற்கு கீழ் குழந்தைகளை உடைய பணியாளர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நன்கு பரிசோதித்த பின்னரே பணிக்கு அமர்த்துவதோடு, சில நேர்வுகளில் அவர்களை அவர்களது வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.  எக்காரணம் கொண்டும் அத்தகையை பணியாளர்களை பிறருடன் கலந்திட அனுமதிக்கக்கூடாது.

 

6. பணிக்கு வரும் அனைத்து பணியாளர்களும் அவர்களது வீட்டிலிருந்து வருவது முதல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்ப செல்லும் வரை நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையினை கட்டாயம் அணிந்திருக்க அறிவுறுத்துவதோடு, முகக்கவசங்களை கட்டாயம் அணிந்து வருவதையும் உறுதிபடுத்துதல்வேண்டும்.

 

7. 200 பணியாளர்கள் வரை பணிபுரியும் நிறுவனத்தில் அவர்களை பரிசோதிக்க ஏதுவாக அழைத்தால் உடன் வரப்பெறும் ஓர் மருத்துவரை நிறுவனமே ஏற்பாடு செய்திடல் வேண்டும்.

 

8. 200 முதல் 1000 பணியாளர்கள் வரை பணிபுரியும் நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவர்களை நிறுவனத்தால் அமர்த்தப்படும் மருத்துவரை கொண்டு தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

 

9. 1000 பணியாளர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில், நிறுவனத்திற்கு அருகாமையிலுள்ள தகுதி வாய்ந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற உரிய ஏற்பாடுகளும், தினமும் பணியாளர்களை மருத்துவ பரிசோதனை செய்திட ஏதுவாக உரிய ஏற்பாடுகளை செய்திடல் வேண்டும்.

 

10. பணியாளர்கள் வெளியிலிருந்து அழைத்து வரும் நேர்வுகளில் உரிய வாகன வசதிகளை நிர்வாகமே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.  அவ்வாறு அமர்த்தப்படும் வாகனங்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட பயண இருக்கையிலிருந்து 50 சதவீதம் அதாவது இருக்கைக்கு ஒருவர் வீதம் மட்டுமே பணியாளர்கள் வாகனத்தில் உட்கார அனுமதிக்கப்பட வேண்டும் என்பதோடு,வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது அவர்களுக்கு கிருமி நாசினியும் வழங்கப்படவேண்டும்.

11. கார் மற்றும் வேன்களில் பயணம் செய்யும் பணியாளர்கள் ஓட்டுநருடன் இருவர் மட்டுமே சென்று வருவதை ஊர்ஜிதப்படுத்துவதோடு, இரு சக்கரவாகனங்களில் ஒருவர் மட்டுமே பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்படவேண்டும்.

 

12. நிறுவனத்திற்குள் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் வரப்பெறும் நேரங்களில் அவைகள் அனைத்திற்கும் கிருமிநாசினி தெளிக்கப்படுவதோடு, வாகனங்களை உரிய சமூக இடைவெளிவிட்டு நிறுத்திட அறிவுறுத்தப்படவேண்டும். மேலும், நிறுவன பேருந்துகளை அவ்வப்பொழுது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திடவும், வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுமை பணியாளர்கள் அவ்வப்பொழுது கையை சுத்தமாக கழுவிட அறிவுறுத்தப்பட வேண்டும்.

 

13. நிறுவனத்தின் உள்ளே நுழையும் பொழுது கட்டாயமாக உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு ஏற்பாடு செய்திடுவதோடு, உள்ளே நுழையும் போதும், வெளியே செல்லும் பொழுதும் கைகளை சுத்தமாக கழுவிடவும், கிருமிநாசினி பயன்படுத்திடவும் அறிவுறுத்தப் படவேண்டும்.

 

14. நிறுவன வளாகத்தினை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை காலையும், மாலையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதோடு, நிறுவனத்தால் நடத்தப்படும் சிற்றுண்டி வளாகம், கூட்டரங்கு, கழிவறை மற்றும் ஓய்வு அறைகளை அவ்வப்பொழுது சுத்தப்படுத்த வேண்டும்.  இதற்கென தனியே தூய்மை பணியாளர்களை அமர்த்துவதோடு, தெளிப்பான் கருவிகளை பயன்படுத்திடவும் அறிவுறுத்தப்பட வேண்டும்.

 

15. சமூக இடைவெளி கடைப்பிடிப்பது மிக முக்கியமானது என்பதனால், நிறுவன பாதுகாவலர்களை கொண்டு இதனை கண்காணித்திட வேண்டும். உணவறைக் கூடங்களில் சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுவதோடு, மின்தூக்கி என்னும் லிஃப்டை பயன்படுத்தப்படும் நேரங்களில் இரண்டு அல்லது நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடுமானவரை படிக்கட்டுகளையே பயன்படுத்திட அறிவுறுத்தப்பட வேண்டும்.

 

16. நிறுவனத்தினுள் தங்கிடும் தொழிலாளர்கள் இரவு உறங்கச்செல்லும்முன் சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு தனிநபர் சுத்தம் பேணிட அறிவுறுத்தப்படுவதோடு, பணியாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு படுப்பதற்கு படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்திடல் வேண்டும்.

 

17. ஷிப்ட் என்னும் சுழற்சி முறையில் நிறுவனம் செயல்படும் நேரங்களில் கூட்டமாக பணியாளர்கள் ஒன்று கூடுவதை தடுத்திடும் வகையில் ஒருசுழற்சி பணி முடிவுற்றதும், அடுத்தசுழற்சிக்கு  30 நிமிட இடைவெளியில் துவங்கப்பட வேண்டும்.

 

18. பணியாளர்களுக்கு கட்டாய மருத்துவ காப்பீடு செய்து கொடுத்திடல் வேண்டும் என்பதோடு கொரோனா தொடர்பான பிரச்சார துண்டுகளை விநியோகம் செய்திடல் வேண்டும்.

 

19. நிறுவனத்தின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கருவி பொருத்திடல் வேண்டும். மேலும், நிறுவனத்தில் தேவையற்ற நபர்கள் வருவதை தடை செய்திடல் வேண்டும்.

 

மேற்கூறிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறும் நிறுவன உரிமையாளர்களுக்கு 2005 – ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைவிதி (பிரிவு 51 – 60) -ன் கீழ் தண்டனை விதிக்கப்படும். மேலும், அரசிற்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ மேற்காணும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை பின்பற்றுவதாக தவறான தகவல் அளிக்கும்பட்சத்தில் மேற்காணும் பேரிடர் மேலாண்மை விதியின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் நேரங்களில் தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்  திருப்பூர் மாவட்டத்தில், கொரோனாநோய் தொற்றுபரவாமல் தடுத்திட ஏதுவாக தமிழக அரசால் கட்டுமான நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவது குறித்து பணியமர்த்தப்படும், தொழிலாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்திட ஏதுவாக கீழ்வரும் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

 

1. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைச் சார்ந்த எவரையும் பணியில் அமர்த்தக் கூடாது.  தினமும் மாவட்டஆட்சியர் அலுவலகத்திலி ருந்து  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை எவை என்பது குறித்து அறிக்கைபெற்று அதன்படி கட்டுமான தொழிலாளர்களை பணிக்கு அழைத்திடல் வேண்டும்.

 

2. பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்கள் மருத்துவரீதியாக பரிசோதிக்கப்பட்டு கொரோனா நோய்த்தொற்று அற்ற, தகுதி வாய்ந்த நபர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். மேலும், பணிக்கு வரவுள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளதா என்பதை கண்டறிந்த பின்னரே பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

 

3. பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வேண்டிய அளவிலான சோப்பு மற்றும் நீரினை ஒப்பந்தாரர் அல்லது கட்டிட உரிமையாளர் ஏற்பாடு செய்திடல் வேண்டும்.

 

4. அனைத்து தொழிலாளர்களுக்கும் முகக்கவசம் மற்றும் அடிக்கடி கைக்கழுவுவதன் அவசியம் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்து வதன் முக்கியத்துவத்தனையும் தெரிவிப்பதோடு கொரோனா நோய் தொற்று பரவமால் மேற்கொள்ளப்பட வேண்டிய விபரத்தினையும் தெரிவித்திடல் வேண்டும்.

 

5. பணி மேற்பார்வையாளர்கள் அவ்வப்பொழுது பணியாளர்களின் உடல்நிலை குறித்து விசாரணை மேற்கொள்வதோடு, பணியாளர்களுக்கு இடையேயான சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வாறு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தப்பட வேண்டும்.

 

6. பணிபுரியும் இடத்தில் ஒரு மணிக்கு நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணியமர்த்திடவும், பணியாளர்கள் மதிய உணவு அருந்தும்பொழுது சுத்தமாக சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவிய பின்பு உணவு அருந்திடவும், அவ்வாறு உணவு அருந்திடும் பொழுது சமூக இடைவெளியினை கடைப்பிடித்திடவும் அறிவுறுத்தப்பட வேண்டும்.

 

7. 55 வயது கடந்த பணியாளர்கள் மற்றும் 05 வயதிற்கு கீழ் குழந்தைகளை உடைய பணியாளர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நன்கு பரிசோதித்த பின்னரே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

 

8. பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த ஆரோக்ய சேது மென்செயலி எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தெளிவுரைகளை வழங்கப்பட வேண்டும்.

 

9. தொழிலாளர்கள் கூட்டமாக கூடுவதையும், 5 நபர்களுக்கு மேல் கூடுவதையும் தடுத்திடல் வேண்டும்.

 

10. இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.

 

11. பணிபுரியும் இடத்தில் குட்கா, புகையிலை மற்றும் இதர லாகிரி வஸ்துக்கள் பயன்படுத்துவதை தடை செய்வதோடு பணியிடத்தில் எச்சில் துப்புவதையும் தடை செய்திடல் வேண்டும்.  மேலும், தேவையற்ற வெளியாட்கள் பணிபுரியும் இடத்தில் வருவதற்கு தடை செய்ய வேண்டும்.

 

12. பணிநேரத்தில், பணியாளர்கள் அவ்வப்போது வெளியேறி மீண்டும் பணியிடத்திற்கு வருகை புரிவதை தடுத்தல் வேண்டும்.  அதி முக்கியமான காரணங்களுக்கு மட்டுமே வெளியில் செல்வதை ஊர்ஜிதப்படுத்தி, அதற்குதனியே ஒரு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

 

மேற்கூறிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறும் ஒப்பந்ததாரர்களுக்கு 2005 – ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை விதி (பிரிவு 51 – 60)-ன் கீழ் தண்டனை விதிக்கப்படும். மேலும், அரசிற்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ மேற்காணும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதாக தவறான தகவல் அளிக்கும் பட்சத்தில் மேற்காணும் பேரிடர் மேலாண்மை விதியின்கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், மேலும், தொழில்துறையினர் தங்களது அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு தேவையான தேவைகளை முடிந்த அளவிற்கு நிறைவேற்றிட வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் முககவசங்களை முழுமையாக  மற்றும்  முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், தொழில்துறையினர் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அரசின் விதிமுறைகளை தொழில்துறையினர் முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வின் போது,  மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.ஆர்.சுகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் மற்றும் பலவாறு தொழில்துறையினர் திரளாக  கலந்து கொண்டனர்.


Leave a Reply