பிரதமரிடம் உதவி கோரிய உத்தவ் தாக்கரே! 21ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மகாராஷ்டிரா சட்ட மேலவைக்கு வருகிற 21ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவி தப்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

மகாராஷ்டிர முதல்வராக கடந்தாண்டு இறுதியில் பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரே அந்த பதவியில் நீடிக்க 6 மாதங்களுக்குள், அதாவது மே மாதம் 28ம் தேதிக்குள் சட்டப்பேரவைக்கு அல்லது சட்ட மேலவைக்கு தேர்வாக வேண்டிய கட்டாயம் உள்ளது.

 

ஆனால் ஏப்ரல் மூன்றாம் தேதி 9 காலியிடங்களுக்கு மகாராஷ்டிராவில் நடைபெறவிருந்த மேலவை தேர்தல் கொரொனா சூழலை காரணம் காட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தலை நடத்த பரிந்துரைக்குமாறு பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் கேட்டுக்கொண்டார்.

 

மேலவை தேர்தல் நடத்தப்பட்டாவிட்டால் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று பிரதமரிடம் உத்தவ் தாக்கரே எடுத்துக் கூறினார்.இந்த நிலையில் மேலவை தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோசியாரி கடிதம் எழுதியிருந்தார்.

 

இதனை ஏற்று இந்த மாதம் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதனால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.


Leave a Reply