கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு…! உற்பத்தியாளர்கள் அரசுக்கு நன்றி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவி சார் குறியீடு கிடைத்திருப்பதால், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

கோவில்பட்டி என்றாலே எல்லாருக்கும் நினைவு வருவது கடலை மிட்டாய் . 1920ம் ஆண்டு கோவில்பட்டியில் பொன்னம்பலம் நாடார் என்பவர் தான் கடலை மிட்டாய் தயாரிக்க ஆரம்பித்தார். இது நாளடைவில் கோவில்பட்டி பகுதியில் குடிசை தொழிலாளாக மாறியது. கரிசல் மண்ணில் விளைந்த கடலையை சுத்தப்படுத்தி வறுத்து, தாமிரபரணி தண்ணீருடன் இனிப்பு சுவை சேர்த்து செய்யப்படுவதால் இதன் சுவையும், தரமும் கோவில்பட்டி கடலை மிட்டாய் தான் பெஸ்ட் என்ற பெயரை அன்று முதல் இன்று வரை வாங்கி கொடுத்து கொண்டு இருக்கிறது.

தற்பொழுது கோவில்பட்டி நகரில் 100 கடலைமிட்டாய் தயாரிக்கும் நிறுவனங்களும், அதனை நம்பி 5 ஆயிரம் தொழிலாளர்களும் உள்ளனர். கோவில்பட்டி கடலை மிட்டாய் இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் இன்றைக்கு அதிகளவுக்கு ஏற்மதி செய்யப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு இருக்கும் கிராக்கியை பார்த்து பல இடங்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்று தயாரித்து விற்பனை நடைபெறும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

இதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், என்றைக்கும் கோவில்பட்டி கடலைமிட்டாய் பெயர் நீடித்து நிற்க வேண்டும் என்று விரும்பிய கோவில்பட்டியில் உள்ள கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள்,2014ம் ஆண்டு கோவில்பட்டி உதவி கலெக்டராக இருந்த விஜயகார்த்திகேயன் (தற்போது திருப்பூர் ஆட்சியர்) மூலமாக புவி சார் குறியீடுக்கு முயற்சி செய்தனர்.

ஆனாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவி சார் குறியீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு கொண்டே வந்தது. 2018ல் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் முயற்சி மேற்கொண்டனர். இவர்களின் முயற்சிக்கு கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏவும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜீவும் உறுதுணையாக இருந்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றது மட்டுமின்றி தேவையான ஆவணங்கள் கிடைக்கவும் வழிவகை செய்தார்.

 

இதன் பயனாக 7 ஆண்டுகளாக போராடிய போராட்டத்திற்கு வெற்றியாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.இது கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி தங்களுடைய கடலை மிட்டாய்க்கு நல்ல மரியாதை கிடைக்கும் ஏற்றும், வெளிநாடுகளுக்கு இனி அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நிலை உருவாகும்.

 

தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், இதன் மூலமாக கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயாரிப்பு அதிகாரிப்பது மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், இனி தங்களை தவிர வேறு ஊர்களில் தயாரிப்பு செய்து கோவில்பட்டி கடலை மிட்டாய் என்று யாரும் விற்பனை செய்ய முடியாது என்பதால் தங்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைக்கும் என்றும், இதற்கு உதவி அனைத்து அதிகாரிகள், முதலமைச்சர், அமைச்சர் மற்றும் கோவில்பட்டி நகர மக்களுக்கும் கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Leave a Reply