கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கும் உலகத்துக்கு கொரொனா மூலம் பாடம் சொல்லி தர போறேன்..! நைட்டியுடன் சாமியாடிய பெண்!
கொரொனா அடங்காத தமிழகத்தில் கோவில்கள் எல்லாம் பூட்டப்பட்டு விட்ட நிலையில் அம்மன் வந்திருப்பதாக அருள்வாக்கு கூறிய நைட்டி போட்டு அம்மையார் இவர்தான். ஆம்பூர் பைபாஸ் சாலையை ஒட்டிய குடியிருப்பு பகுதியிலிருந்து நைட்டியுடன் சாலையில் தலைவிரி கோலமாக வந்த பெண் ஒருவர் நாக்கை நீட்டிக்கொண்டு சாலையில் செல்ல அப்பகுதி இளைஞர்கள் செல்போன் கேமராவுடன் அவரை பின் தொடர்ந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் கையை உயர்த்தியும், நாக்கை துறுத்தியும் ஆவேசமாக மூச்சிறைத்து அருள்வாக்கு சொல்லத் தொடங்கினார் அந்த அம்மையார். நாட்டிற்குள் பாவிகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் கொரொனா மூலம் அவர்களுக்கு பாடம் கற்பிப்பதாகவும், இந்த கொரொனா பாதிப்புகள் நீங்க முழுமையாக ஏழு மாதங்கள் வரை பிடிக்கும் என்றும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் போல அருள்வாக்கு கூறினார் அந்த அம்மையார்.

அந்தப் பெண்ணை சிலர் தொட்டு தூக்க முயல யாரும் தன்னை தொடக்கூடாது என்று தனிநபர் இடைவெளியுடன் உக்கிரமாக நடந்து கொண்டதால் ஊரே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. இதையடுத்து அப்பகுதி பெண்கள், சாலையில் ஆடிய சாமியை மலையேற்ற முடிவு செய்து அந்தப் பெண்ணின் உடலில் சூடு ஏற எரிந்துக் கொண்டிருந்த சூடத்தை அப்படியே நாக்கில் போட்டு வாயை மூடினார்.
கையில் ஊற்றப்பட்ட தண்ணீரைக் குடிப்பதும் வேட்டையன் உடன் எஸ்கேப் ஆன சந்திரமுகி போல பிளாட்பாரத்தில் விழுந்தார் அந்த அம்மையார். மக்கள் விழிப்புடன் வீட்டில் இல்லாமலும் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் வீதியில் சுற்றித் திரிந்தால் இந்த அம்மையாரின் அருள்வாக்கு போல மே 3ஆம் தேதிக்கு பின்னர் கொரொனா ஊரடங்கு தொடரவே செய்யும் என்பது கசப்பான உண்மை.






