கொரோனா ஒரு சிறப்பு பார்வை :இந்தியா என்ன செய்யவேண்டும் ? சித்த மருத்துவம் கைகொடுக்குமா !

Publish by: சஃபியுல்லா --- Photo :


உலக சுகாதார நிறுவனம் கோவிட் – 19 -ன், மருத்துவரீதியான அறிகுறிகளாக காய்ச்சல், நெஞ்சில் சளி சேருவது, மூச்சு இரைப்பு போன்ற நிமோனியா நோய்க்கான அறிகுறிகள்தான் இந்நோய்க்கும் இருப்பதாக கூறியுள்ளது. கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவத்திலும் மருந்து கிடையாது என்ற நிலையில் பழைய மூலக்கூறுகளின் மறு பயன்பாடு என்ற முறையில் ஏற்கனவே பலநோய்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளைத்தான் இப்போது அவர்கள் கொடுத்து வருகிறார்கள்.

 

எச்.ஐ.விக்குக் கொடுக்கப்பட்ட மருந்திலிருந்து இரண்டு மூலக்கூறுகள், மலேரியாவுக்குப் பயன்படுத்தப்பட்டகுளோரோகுயின் சல்ஃபேட் மருந்திலிருந்து சில மூலக்கூறுகள், நுரையீரல் சார்ந்த தொற்றுகளுக்குப் பயன்படுத்தப் படும் ஒரு எதிர் நுண்ணுயிரி – அசித்ரோமைசின் ஆகிய மருந்துகள்தான் இப்போது இந்த நோய்க்குக் உலகம் முழுவதும் கொடுக்கப்பட்டுவருகிறது. இவை வேறு நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டவை. ஆனால், இப்போது கொரோனாவுக்காக கொடுக்கப்படுகிறது.

 

கொரோனாவைக் கட்டுப்படுத்தக்கூடிய, கொரோனாவைத் தடுக்கக்கூடிய மருந்து என ஒரு முழுமையான மருந்து அலோபதி, சித்த, ஆயுர்வேத, யுனானி போன்ற எந்த மருத்துவத்திலும் கிடையாது. எந்த மருத்துவத்திலும் கொரோனாவுக்கு மருத்துவம் இல்லாதநிலையில், சித்த மருத்துவர்கள் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், ஆடாதொடை மணப்பாகு ஆகியவற்றை கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியே அதிகரித்து நோயை குணப்படுத்தலாம் என சித்தமருத்துவர்கள்ஆலோசனை சொல்லியுள்ளனர்.

 

நிமோனியா போன்ற மரணம் வரை கொண்டுசெல்லக்கூடிய காய்ச்சல்களுக்கு முக்கியமான சித்தமருந்து கபசுர குடிநீர் தான். இந்த மருந்தில் சுக்கு, திப்பிலி, லவங்கம், கடுக்காய் தோல், சிறுகான்சொறி, அக்கரகாரம் வேர், முள்ளி வேர், ஆடாதொடை இலை, கற்பூரவல்லி இலை, சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு, சமூலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு என சம அளவில் 15 வகையான மூலிகைகள் இருக்கின்றன. இவை, சளி, மூச்சு இரைப்பு, காய்ச்சல், தொண்டைவலி ஆகியவற்றைக் குறைக்கக்கூடிய மூலிகைகள். ஆகவேதான் சித்தமருத்துவர்கள் இந்த மருந்தை கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளனர்.

மத்திய அரசானது இந்த மருந்து வைரஸ்களைக் குறைப்பதில் எப்படிச்செயல்படுகிறது என்ற ஆராய்ச்சிக்கும் உட்படுத்தி  கண்டறியவேண்டும். கொரோனாவுக்கான தடுப்புமருந்து என்றால் தடுப்பூசியாகத்தான் இருக்கவேண்டும். அப்படியான எந்தஆய்வும் இந்தமருந்தில் கண்டறியப்படவில்லை . எனவே இது தடுப்புமருந்து அல்ல. இந்த மருந்து ஒரு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். கொரோனா அறிகுறி உள்ள 100 பேர்  இந்த வைரஸால் தாக்கப்படுகிறார்கள் என்றால் அதில் சிலருக்கு மட்டும் தான் நோயாக மாறிவிடுகிறது. அந்த ஒரு சிலருக்கும் என்ன வேறுபாடு என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

 

சுவாசமண்டலக் கிருமிகளை எதிர்க்க உடம்பில் ஒரு ஆற்றல் இயற்கையாகவே இருக்கிறது. ஒருவேளை அந்த ஆற்றலை அதிகபடுத்த இந்தமருந்து பயன்படலாம். ஒரு மருந்தை ஆய்வுசெய்து முறையாக ஒரு நவீன மருந்தாக வர குறைந்தபட்சம் ஒரு பில்லியன் டாலரும் ஏழு ஆண்டுகளும் தேவைப்படும். உலக சுகாதார நிறுவனம், மியூரி என்ற திட்டத்தை முன்வைக்கிறது. ஒரு இக்கட்டான காலகட்டத்தில், வேறு மருந்துகள் இல்லாத காலகட்டத்தில், இம்மாதிரியான சட்டங்களுக்குள் செல்லாமல் அதற்கான அறிஞர்கள் ஒரு ஆய்வாக செய்து பார்க்கலாம் என்கிறார்கள். ஆனால், அதை பல நாடுகள்  ஏற்க மறுப்பதால்தான் சிக்கல் உருவாகிறது.

 

சீனாவில் பாரம்பரியமருந்தை பயன்படுத்துகிறார்கள். வுஹானுக்கு சென்ற பாரம்பரிய மருந்துவர்கள், QPD என்ற கஷாயத்தை நிமோனியாவைக் கட்டுப்படுத்தவும் நுரையீரலில் சளி சேராமல் இருக்கவும் நவீன மருந்து களோடு சேர்ந்து கொடுத்துள்ளனர். பாரம்பரிய சீன மருத்துவத்தில் அது சாத்தியமென்றால் இங்கே ஏன் அது சாத்தியமில்லை? சீனாவில் இந்நோய் தொடர்பாக 51 ஆய்வுகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா 50 ஆய்வுகளை நடத்துகிறது. பிரிட்டனில் 10 ஆய்வுகள் நடத்துகிறது. இந்தியா ஒரு ஆய்வையும் நடத்தவில்லை.

 

மார்ச் மாதத் துவக்கத்தில் இந்தியாவின் ஆயுஷ் துறையானது இந்தியாவில் இந்தத் தொற்று பெரிதாகப் பரவினால் என்ன செய்வது என்பது குறித்து மாற்று மருத்துவமுறை நிபுணர்களுடன் விவாதித்து, விதிமுறைகளை உருவாக்கியது. மத்திய அரசானது, மாற்று மருந்து நிபுணர்கள், மருத்துவத் துறைக்கு வெளியில் உள்ள அறிவியல் ஆய்வாளர்கள், நவீன மருத்துவர்கள் ஆகிய மூவரையும் சேர்த்து ஒரு குழு அமைத்து இது தொடர்பான ஆய்வுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்தால் இதை உடனடியாக செய்யமுடியும்.

 

ஆனால் இந்தியாவில் பிரதமர் அலுவலகத்திலிருந்து இப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்த நிலையில் என்ன செய்யலாம் என கேட்டிருக்கிறார்கள். மாநில அரசிடமும் பேச்சிக்கு வார்த்தை நடத்துகிறார்கள். ஆனால், இதுபோதாது. போர்க்கால அடிப்படையில் எல்லா ஆய்வுகளையும் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, கோவிட் என்ற கொரோனா நோய்க்கு மருந்துகான ஆய்வை முன்னெடுத்தால் நாம் தீர்வைக்காண முடியும். வரவிருக்கும் தொற்றுகளுக்கும் நாம் மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், இப்போது தேவை ஊரடங்குதான். அதைத்தான் கண்டிப்பாக பின்பற்றவேண்டும். அப்போதுதான் சமூகரீதியாக பரவுவதை தடுக்க முடியும்.


Leave a Reply