சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு..எப்போது?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை பிறப்பித்தது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 26 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நான்கு நாட்களும் சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை மூன்று நாட்களும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமை செயலகம் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, காவல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத் துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் 33 சதவீத பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அம்மா உணவகங்கள், ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்து வீடுகளுக்கு வரவழைக்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

 

முதியோர், மாற்றுத் திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி செய்வோருக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் ஆதரவற்றோருக்கு மாவட்ட நிர்வாகங்கள் சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களின் உரிய அனுமதியுடன் இயங்கலாம் என்று கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகளில் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும்.

 

காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளை தவிர பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்றும் பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட இதர அரசு அலுவலகங்கள் செயல்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஐந்து மாநகராட்சி களைத் தவிர பிற இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள், அனுமதிகள் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 மாநகராட்சிகளில் கொரொனா பாதிப்பு என்பது அதிகமாக இருப்பதால் முதலமைச்சர் முழு ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.


Leave a Reply