ஊரடங்கு காலத்தில் வாகன ஓட்டிகளுக்கு மேலும் அதிர்ச்சி..! சுங்கச்சாவடிகள் திறப்பு மட்டுமின்றி கட்டணமும் திடீர் உயர்வு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் சுங்கச்சாவடிகளை திறப்பதா? என்று எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், கட்டணங்களையும் அதிரடியாக உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகள் வசூலை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வும் அமலுக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகின் பல நாடுகளில் மனித உயிர்களை கொத்துக் கொத்தாக உயிர்ப்பலி எடுத்துவரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் இந்தியாவிலும் கடந்த மாதம் பரவத் தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கின. பொதுப் போக்குவரத்தும் முழுவதும் தடை செய்யப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டு அனைத்தும் மூடப்பட்டன.

 

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு 2-ம் கட்டமாக மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு, சில குறிப்பிட்ட துறைகள் மற்றும் தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

 

ஊரடங்கில் தளர்வு என்ற அறிவிப்பை சாக்காக வைத்து, நாடு முழுவதும் ஏப்ரல் 20-ந் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் மீண்டும் வசூலை தொடரப்போவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. ஆனால், ஊரடங்கு அமலில் உள்ள தற்போதைய காலக்கட்டத்தில், சாலைகளில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன என்பதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு பல தரப்பிலும் பெரும் எதிர்ப்பு கிளப்பியது. ஊரடங்கு காலத்தில் சுங்கச்சாவடிகளை திறக்க அனுமதிப்பதா? என கண்டனக் குரல்களும் எழுந்தன.

 

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு டோல்கேட்களில் வசூலை தொடங்க விட்டது. அதுமட்டுமின்றி அடுத்த அதிர்ச்சியாக, தமிழகத்தில் மொத்த முள்ள 48 சுங்கச்சாவடிகளில் 26-ல் நள்ளிரவு முதலே 5 முதல் 12% வரை கட்டணங்களையும் அதிகரித்துள்ளதாக அறிவித்து வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டண உயர்வு பொது மக்கள் மற்றும் லாரி போன்ற சரக்குவாகன உரிமையாளர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

 

இந்த கட்டண உயர்வு ஏன் என்பதற்கு நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதிகளில் தமிழகத்தில் சுழற்சி அடிப்படையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்படும். ஊரடங்கு உத்தரவால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த முடியவில்லை.

 

தற்போது நாடு முழுவதும் ஏப்ரல் 20-ந் தேதி முதல் சுங்கச்சாவடிகள் மீண்டும் இயங்குகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் புதிய கட்டண உயர்வை 26 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தியுள்ளோம். இந்த கட்டண உயர்வு, சுங்கச்சாவடிகள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்றவாறு 5 முதல் 12 சதவீதம் வரையில் என்று கூறப்பட்டுள்ளது.

 

ஊரடங்கு காலத்தில் வேலைகளை இழந்து சாமான்ய மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். பல கோடி மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசியும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் சுங்கக் கட்டண வசூலால் விலைவாசி மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதால் சுங்கக் கட்டண வசூலை ஊரடங்கு காலம் முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என வியாபாரிகளும், சரக்கு வாகன உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply