“கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தற்காலிக தீர்வுதான்!!” பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்..! ராகுல் காந்தி வலியுறுத்தல்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு தற்காலிக தீர்வுதான் என்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

 

கொரோனா தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை எனவும் ராகுல் காந்தி புள்ளி விபரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறார். உலக நாடுகள் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் 10 லட்சம் பேரில் 149 பேருக்கு மட்டுமே என்ற ரீதியில் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது என இரு தினங்களுக்கு முன் பட்டியலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பங்கேற்றார், அப்போது அவர் கூறுகையில், நமது நாட்டில் கொரோனா பரிசோதனை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இதே அளவிலான பரிசோதனை தொடர்ந்தால் கொரோனா தொற்றை கணிக்கமுடியாது. ஊரடங்கு உத்தரவு என்பது ஒரு தற்காலிக தீர்வுதான் . மக்கள் வெளியே வரும்போது மீண்டும் பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

 

எனவே ஊரடங்கு மட்டும் போதாது. பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு குடோன்களில் இருந்து உணவு தானியங்களை எடுத்துச் சென்று வழங்க வேண்டும். ஆனால் உணவு தானியங்கள் இன்னும் பொது மக்களை சென்றடையவில்லை.

 

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கேரள மாநிலம் வெற்றி கண்டுள்ளது. வயநாடு தொகுதியில் போதிய கருவிகள் இருப்பதால் அங்கும் பாதிப்பு குறைந்து கொரோனாவுக்கு எதிராக வெற்றி கிடைத்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தார்.


Leave a Reply