நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் தற்காலிக நிறுத்தம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண வசூல் இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பரவாமல் தடுக்க, மக்களை வெளியே நடமாட விடாமல் வீடுகளுக்குள் முடங்கச் செய்வது ஒன்றே தீர்வு என்று கூறி நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் 2-வது நாளாக இந்தியா முழுக்க முடங்கியுள்ளது .

 

அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. ரயில், விமானம், பேருந்து, வாகனங்கள் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.

 

இதனால் சாலைகள், தெருக்கள் என அனைத்துமே வெறிச்சோடிக் கிடக்கின்றன. மக்களின் வெளிநடமாட்டத்தை கண்டிப்புடன் தடுக்க, கைகளில் பெரிய, பெரிய லத்திகளுடன் போலீசார் வலம் வருகின்றனர். தேவையற்று நடமாடுவோரை லத்திகளால் சரமாரியாக அடி கொடுக்கவும் போலீசார் தயங்குவதில்லை. இப்படி போலீசார் காட்டிய கடுமை காரணமாக இன்று சாலைகளில் இரு சக்கர வாகனங்களின் நடமாட்டமும் இல்லாமல் போய்விட்டது.

 

இதனால் தற்போது நாடு முழுக்க அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்கான ஓரிரு வாகனங்களின் போக்குவரத்து மட்டுமே உள்ள நிலையில், சுங்கச்சாவடிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இப்படி கொரோனாவால் நாடே முடங்கிக் கிடக்க சாலைகளில் அத்தியாவசியத் தேவைக்காக செல்லும் ஓரிரு வாகனங்களிலும் சுங்கக் கட்டணம் வசூலித்தே தீருவது என டோல்கேட்களில் வசூல் வேட்டை நடத்துவது பெரும் சர்ச்சையானது.

 

இதனை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளும் கடுமையாக விமர்சித்தது.நாடே பதற்றத்தில் உள்ள தற்போதைய சூழலில் சுங்க கட்டண வசூலை நிறுத்துவது குறித்து முடிவெடுக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர் .இதையடுத்து இன்று முதல், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.


Leave a Reply