“விழித்திரு .. விலகியிரு.. வீட்டில் இரு…!!!” கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனாவுக்கு எதிரான போரில், மக்கள் அனைவரும் ஒத்துழைத்து, ஊரடங்கு உத்தரவை மதித்து வெளியில் வர வேண்டாம் எனவும், விழித்திரு… விலகியிரு.. வீட்டில் இரு… என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

உலகை உலுக்கி வரும் கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்றும், நேற்றும் என இரண்டு முறை நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். முதல் முறை உரை நிகழ்த்திய போது, கொரோனாவை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதன் பாதிப்பு நமக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்துவது நிச்சயம். இதற்கு தீர்வு பொது வெளியில் நடமாடக் கூடாது என்பது தான். எனவே ஒரு நாள் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

 

அதன்படி கடந்த ஞாயிறன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற நாட்டு மக்கள் அனைவரும் சில வாரங்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்க வேண்டியது அவசியம். நாட்டின் பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் தான் முக்கியம் என்ற பிரதமர் மோடி , நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு என அறிவித்தார்.

 

இந்நிலையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியது போல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்றிரவு 7 மணிக்கு உரை நிகழ்த்தினார். அவருடைய உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

தமிழக முதலமைச்சராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். கொரோனா முன்னெச்சரிக்கையாகவும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படுவோர் நலனுக்காகவும் தமிழக அரசு 3280 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாயும், முறைசாரா தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.

 

ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். அரிசி, மளிகை, பால், இறைச்சி, மற்றும் மருந்து பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம். எனவே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் உறுதி ஏற்போம். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும் தமிழக மக்களையும் காக்க உறுதி ஏற்போம். பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாப்போம்.

 

மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். கொரோனா பரவுவதை தடுக்க எப்படி இருக்கவேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தற்போது அவசியமாக உள்ளது.

 

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனிமைப் படுத்திக் கொள்வதால் குடும்பம், சமுதாயம், நாட்டை காப்பாற்ற முடியும்.

 

21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை இல்லை . உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும் அரசின் உத்தரவு . பொது வெளியில் செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்து அரசின் உத்தரவை மதிக்க வேண்டும். எனவே விழித்திரு .. விலகியிரு.. வீட்டிலிரு.. என்பதை தாரக மந்திரமாக நினைத்து, ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Leave a Reply