144 தடை உத்தரவு எதிரொலி : டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் குவியும் மக்கள்..! சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு பொருட்களை விற்க வாய்ப்பு!! மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் கூட்டமாக கூடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசால் பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, கெடுபிடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழக அரசின் திடீர் 144 தடை உத்தரவு அறிவிப்பால், மக்கள் கூடக் கூடாது என்பதற்கு நேர்மாறாக மக்கள் திருவிழா கூட்டம் போல சூப்பர் மார்க்கெட்டுகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் குவிந்து வருகின்றனர்.நாளை பொருட்கள் கிடைக்குமா என்ற அச்சத்தில் பொது மக்கள் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

 

இன்று தமிழக சட்டப்பேரவையில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். பேருந்துகளும் நாளை மாலையுடன் நிறுத்தப்படும் என்று அறிவித்த முதல்வர், அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி, பால், மருந்து போன்றவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு வெளியான பின்னரும் பொது மக்கள் நாளை பொருட்கள் கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற அச்சத்தில் இன்றே சூப்பர் மார்க்கெட்டுகளிலும்,டிபார்மெண்டல் ஸ்டோர்களிலும் குவிந்து பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட் மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களை கூடுதல் விலைக்கு விற்க வாய்ப்புள்ளது என பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சில கடைகளில் பாதி ஷட்டரை மூடி வைத்து பொருட்கள் பற்றாக்குறை இருப்பதாக காண்பித்து கூடுதல் விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே,மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசும்,அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று பணியாற்றி வரும் வேளையில் இந்த 144 தடை உத்தரவால் சூப்பர் மார்க்கெட் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களின் உரிமையாளர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் பொது மக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply