144 தடை உத்தரவு எதிரொலி : சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்..! கோவையிலும் பேருந்து கிடைக்காமல் திண்டாட்டம் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


நாளை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு என்ற அறிவிப்பு வெளியானவுடனே சென்னை மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், சிறுதொழில் செய்வோர் என பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இதனால் கோவை சிங்காநல்லூர்,சாய்பாபா காலனி புதிய பேருந்து நிலையம்,உக்கடம் பேருந்து நிலையம்,காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குவிய போதிய பேருந்து கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

 

கொரானோ வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் கூட்டமாக கூடக் கூடாது என்பதற்காகத்தான் பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கெடுபிடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் கூட்டமாக இருந்தால் கொரோனா வைரஸ் பரவல் சுலபமாகி விடும்.இதனை தடுக்கவே தமிழக அரசும்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கின்றனர்.ஆனால்,தமிழக அரசின் திடீர் 144 தடை உத்தரவு அறிவிப்பால் மக்கள் கூடக் கூடாது என்பதற்கு நேர்மாறாக மக்கள் திருவிழா கூட்டம் போல மார்க்கெட்டுகள், பேருந்து நிலையங்களில் கூட்டம் கூட்டமாய் கூடி வருகின்றனர்.

 

இன்று தமிழக சட்டப்பேரவையில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அரசுப்பேருந்துகளும் நாளை மாலையுடன் நிறுத்தப்படும் என்று அறிவித்த முதல்வர் அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி, பால், மருந்து போன்றவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

ஆனால், ஒரு வாரம் 144 தடை உத்தரவு என்ற அறிவிப்பால் சென்னை,கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் தங்கி பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.கோவையில் சிங்காநல்லூர்,சாய்பாபா காலனி புதிய பேருந்து நிலையம்,உக்கடம் பேருந்து நிலையம்,காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். ஆனால்,போதிய பேருந்துகள் கிடைக்காமல் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

 

மேலும், கூட்டம் அதிகமாக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள நிலையில் கோவையில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சிக்னல் அருகேயே நின்று,ஓடும் பேருந்துகளில் தங்களது பைகளை போட்டு இடம் பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.இதனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் துறை கூடுதல் காவலர்களை நியமித்து பொது மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு….


Leave a Reply