வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பலருக்கு கொரொனா அறிகுறி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய பலர் கொரொனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த சில நாட்களாக கேரளாவில் பணிபுரிந்து விட்டு சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

 

அப்போது கொரொனா அச்சம் காரணமாக முருகன் மற்றும் அவரை அழைத்து வந்த அவரது மனைவி ஆகியோரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இருவரும் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

 

நாகை மாவட்டம் துளசியாப்பட்டினம் சேர்ந்த ஒரு நபர் கடந்த 8ஆம் தேதி சவுதி அரேபியாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு காய்ச்சல், இருமல் அதிகமாக இருந்ததால் பரிசோதனைக்காக திருவாருர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு கொரொனா அறிகுறியாக இருக்கலாம் என அவரது இரத்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பிய மருத்துவர்கள் அவரை சிறப்பு வார்டில் அனுமதித்தனர்.

 

கேரளாவில் பணிபுரிந்து வந்த பேராசிரியை ஒருவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கொரொனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்த அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பிய மருத்துவர்கள் தனி வார்டில் அனுமதித்தனர்.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி செல்வம் இந்தோனேசியாவில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், கொரொனா எதிரொலியால் சொந்த ஊருக்கு வந்தார். திடீரென அவருக்கு தொடர் இருமல், காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது சகோதரர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

 

அங்கு முதலுதவி அளித்த நிலையில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மூர்த்தி செல்வம் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.