அதிமுகவில் 3 ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளுக்கு, இபிஎஸ்.,ஓபிஎஸ் அணிகள் இடையே பெரிய மல்லுக்கட்டே நடந்து கடைசியில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளதாம். அதன்படி இபிஎஸ் கோஷ்டிக்கு ஒன்னு..,ஓ பிஎஸ் அணிக்கு ஒன்னு.. மற்றொன்று கூட்டணிக்கு என்ற ரீதியில் அந்த அதிர்ஷ்டம் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு என பங்கு பிரிக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 2-ந் தேதி காலியாகப் போகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 26-ந்தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுதினம் தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த 6 எம்.பி. இடங்களில் அதிமுகவுக்கும் , திமுகவுக்கும் தலா 3 இடங்கள் கிடைப்பது உறுதி. திமுகவில் ஒரு வழியாக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு விட்டனர். இதில் 3-வது வேட்பாளர் வெற்றி பெற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தயவு தேவைப்படுகிறது. இதையே காரணம் காட்டி காங்கிரஸ் தரப்பு ஒரு சீட் கேட்டது.
ஆனால் திமுக அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல் வேட்பாளர்களை அறிவிக்க, காங்கிரசார் கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தரப்பில் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தி திமுகவுக்கு எதிராக முக்கிய முடிவு எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. இதனால்கடைசி நேரத்தில் திமுக பின் வாங்கி ஒரு சீட்டை காங்கிரசுக்கு ஒதுக்கினாலும் ஆச்சர்யமில்லைதான்.
இந்நிலையில் அதிமுகவில் எம்.பி.யாகப் போகும் 3 பேர் யார்? என்பதில் தான் பெரும் மல்லுக்கட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஓபிஎஸ் தரப்பில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் என பெருந்தலைகள் நெருக்கடி கொடுத்தனராம்.
இதனால் தனது ஆதரவாளர்கள் 2 பேருக்காவது எம்.பி.பதவியை பெற்று விட ஓபிஎஸ் காய் நகர்த்தினாராம். ஆனால் இபிஎஸ் தரப்பும் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, தனது நெருங்கிய நண்பர் சேலம் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், மோகன் ஆகியோரைக் காட்டி 2 சீட் வேணும் என ரெட்டை விரலை காட்ட ஒரே இழுபறி தானாம்.
கடைசியில் ஆளுக்கு ஒன்னு, மற்றொன்று கூட்டணிக்கு என டீலிங் ஓகேவானதாம். இதன்படி ஓபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை டிக் செய்ய, இபிஎஸ் தரப்பு தம்பிதுரை பெயரை ஓகே செய்துள்ளதாம். ஆனாலும் இரு அணிகளிலும் உள்ள மற்ற தலைகள் இன்னும் முட்டி மோதுவதால் பெயர் பட்டியல் வெளியாவது தாமதம் என்றும் கூறப்படுகிறது.
அடுத்து 3-வது சீட்டை கூட்டணியில் யாருக்கு கொடுப்பது என்பதிலும் சலசலப்புதானாம். தேமுதிக தரப்போ கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஒத்துக் கொண்டபடி ஒரு சீட் ஒதுக்கினாலே ஆச்சு என ஒற்றைக் காலில் நின்றதை அதிமுக தரப்பு ரசிக்கவில்லையாம். இதனால் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஒதுக்கலாம் என யோசிக்க அதற்கும் முட்டுக்கட்டை விழுந்ததாம். பாஜகவும் ஒன்னு வேணும் என லேசாக அழுத்தம் கொடுத்தது. ஆனால் அதிமுகவில் ஒட்டுமொத்த தலைகளுமே இதனை புறந்தள்ளி விட்டனராம்.
இந்நிலையில், டெல்லி பாஜக செலவாக்கு மூலம் தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் முட்டி மோதிக் கொண்டிருந்தார். இதனால் பாஜக தரப்பு எங்களுக்கு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.வாசனுக்கு கொடுக்கலாம் என சப்போர்ட் செய்ததாம். கடைசியில் ஜி.கே.வாசன் தான் என முடிவாகி விட்டதாம்.
ஜி.கே.வாசனுக்கு கொடுப்பதால் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் கம்மியாகி விட்ட செல்வாக்கை சரிக்கட்டி விடலாம் என்றும் அதிமுக தரப்பிக் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம். எனவே, அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் வாசனுக்கு கிட்டப் போகிறது என்றால் அது அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும்.