வாக்கிங் சென்ற அமைச்சரிடமே செல்போனை “லபக்” செய்த மர்ம நபர்கள்..! புதுச்சேரியில் நடந்த வழிப்பறி!!
புதுச்சேரியில் கடற்கரையில் வாக்கிங் சென்ற அமைச்சரிடமே செல்போனை வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில அரசியல்வாதிகள் எப்போதுமே வித்தியாசமானவர்கள் தான். முதல்வர்கள் முதல் அமைச்சர்கள் வரை பதவி பந்தா இல்லாமல் மக்களிடையே வலம் வருவது வாடிக்கை.
முன்னாள் முதல்வரான ரங்கசாமி, முதல்வராக இருந்த போதும் சரி, தற்போது எம்எல்ஏவாக இருக்கும் போதும் சரி உடன் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் புல்லட் பைக்கில் வலம் வருவதும் சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதுபோன்றுதான் அமைச்சர்கள் பலரும் சர்வ சாதாரணமாக மக்களிடையே நடனமாடுவது வழக்கம்.
இப்படித்தான், தற்போது கல்வி அமைச்சராக உள்ள கமலக்கண்ணன் பாதுகாவலர்கள் துணையின்றி நண்பர்கள் சிலருடன் புதுச்சேரி கடற்கரையில் நேற்று இரவு வாக்கிங் சென்றார்.

அப்போது செல்போனில் பேசியபடி சென்று கொண்டிருந்த அமைச்சர் கமலக்கண்ணனை மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென வழிமறித்துள்ளனர்.படக்கென்று கையில் இருந்த செல்போனை லபக் செய்த அந்த மர்ம நபர்கள் பைக்கில் பறந்து விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் கமலக்கண்ணன் போலீசில் புகார் செய்தார். ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை, அமைச்சரிடம் பறித்துச் சென்ற நபர்கள் யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் ஒருவரிமே மர்ம நபர்கள் செல்போனை பறித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




