16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் அந்த சிறுமியை கடத்தி சென்ற மற்றொரு வாலிபர் ஆகியோரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மரக்கடை பகுதியை சேர்ந்த முகமது நிஷார் என்பவர் அப்பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார்.

 

28 வயதான இவருக்கும் 16 வயது பெண்ணுக்கும் கடந்த ஆண்டு உறவினர்கள் மற்றும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இருவரும் தனித்தனியே வசித்து வந்த நிலையில், அந்த 16 வயது சிறுமியை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து முகமது நிஷார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடத்திய காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ரஞ்சித் குமார் மற்றும் சிறுமியை திருமணம் செய்த முகமது நிஷார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

தொடர்ந்து 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த முகமது நிஷாரின் பெற்றோர் அப்துல் சலாம், பர்சனா ஆகியோரும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.


Leave a Reply