--- --:--:-- --

அமெ., அதிபர் டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடி கூறியது இதுதான்!!

trump

அமெரிக்காவுடனான வர்த்தக உடன்பாடு குறித்து டிரம்ப்புடன் ஆரம்ப கட்ட பேச்சு நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று பிரதமர் மோடியுடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். டிரம்ப்பின் இந்தப் பயணத்தின் போது இருவரின் இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஏனெனில், மோடி – டிரம்ப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையிலான மிகப் பெரும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகப் போவதாக முதலில் கூறப்பட்டது.

 

ஆனால் இந்தப் பயணத்திற்கு சில நாட்கள் முன்னதாக ஒரு அறிவிப்பு வெளியிட்ட டிரம்ப், தற்போதைக்கு ஒப்பந்தம் எதுவும் கிடையாது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் தான் எல்லாம் நடக்கும் என கூறி, இந்தியாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். அத்துடன், இந்தப் பேச்சுவார்த்தையில், குடியுரிமை சட்டம் காஷ்மீர் விவகாரம் போன்ற இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்தெல்லாம் டிரம்ப் பேசப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

 

இந்நிலையில் இருவரும் இன்று சந்தித்து பேசிய நிலையில், பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் டிரம்ப்புடன் பேசியது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான அனைத்து பிரச்னைகள் குறித்தும் இருவரும் பேசினோம். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு துறை தொடர்பாகவும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினோம். சுகாதார, மருத்துவ ஒத்துழைப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசித்தோம். எரிசக்தி துறையில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகள் இடையே தெளிவான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆலோசனை மேற்கொண்டோம்.

 

இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியப் பயணம் மிக்க மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கிறது. அவர் மீண்டும் ஒரு இந்தியாவுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon