குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவர் பிரச்சனை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆனாலும் தங்களது போராட்டம் தலைமையற்றது என்பதால் தங்களது தரப்பிலிருந்து யாரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது என்பது பற்றி முடிவெடுப்பது மத்திய அரசின் பொறுப்பு எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அவ்வாறு மத்திய அமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய மூன்றையும் திரும்பப் பெறுமாறு அவரை வலியுறுத்துவோம் என போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான சையத் அகமது தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று அமித்ஷவின் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடி வருவோரை மூன்று நாட்களுக்குள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த வார தொடக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தது நினைவுகூறத்தக்கது.