கொரோனா வைரஸ்: தாய்லாந்து, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளையும் பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவு
சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய அரசின் கேபினட் செயலாளர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 52 ஆயிரத்து 332 பயணிகளுக்கு வைரஸ் தாக்கம் தொடர்பாக பரிசோதனை நடைபெற்றிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட 324 பேரில் 53 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் டெல்லி மற்றும் அதன் அருகேயுள்ள மானேசர் பகுதி சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தாயகம் அழைத்துவரப்பட்ட அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் இரண்டு வாரங்களுக்கு அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட உள்ளது. இதற்கிடையே சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1921 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




