கொரோனா வைரசின் கோரப் பிடியில் சிக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஏர்இந்தியா விமானம் நேற்று அனுப்பப்பட்டது. அங்கிருந்து 330 இந்தியர்களை விமானத்தில் ஏற்றி வர திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதில் 6 பேருக்கு காய்ச்சல் இருந்தது உகான் விமான நிலைய சோதனையில் கண்டறியப்பட்டது. இதனால் அவர்களை விமானத்தில் செல்ல சீன அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து 3 சிறார்கள், 211 மாணவ மாணவிகள் உட்பட 324 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஏர்இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை 7.30 மணி அளவில் டெல்லியில் தரை இறங்கியது.
324 பேரும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் டெல்லியில் உள்ள இந்திய திபெத்திய எல்லை காவல் படை முகாமுக்கும், ஹரியானாவில் மனிஷரில் உள்ள ராணுவ முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
தனிமைப்படுத்தப் பட்டுள்ள இந்த இரு முகாம்களிலும் 324 பேரும் 14 நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர். வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.