‘என்னாச்சு நியூசி.,க்கு’.? இன்றைய போட்டியிலும் கடைசி ஓவரில் சொதப்பல்..! சூப்பர் ஓவரிலும் தோற்ற பரிதாபம்!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற நிலையில், இன்று வெலிங்டனில் ஆடிய 4-வது டி20 போட்டியில் இந்தியா ஏனோ தானோ என்பது போல் ஆட, அதைவிட நியூசிலாந்து சொதப்ப, கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாக, இன்றைய போட்டியும் டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது. கடைசியில் இந்தப் போட்டியிலும் வெற்றியை பரிதாபமாக பறிகொடுத்தது நியூசிலாந்து .

 

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் கைப்பற்றி விட்டது. இதனால் இன்று நடைபெற்ற போட்டியில் அணியில் சில மாற்றங்களை செய்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார் கேப்டன் கோஹ்லி.அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, ஷமி, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோரை களத்தில் இறக்கி விட்டார்.

 

ஆனால் இந்த சோதனை முயற்சி பலனளிக்குமா? என்பது போல இந்தியாவின் இன்றைய ஆட்டம் ஏனோ தானோ ஆட்டம் போல அமைந்தது. முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அதிரடி காட்டியது. மன்ரோ (67), சைஃபர்ட் (48) ஆகியோரின் அதிரடியால் வெற்றிக் கோட்டை எட்டி விட்டது என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.

 

ஆனால் கிரிக்கெட்டில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ தெரியாது என்பார்களே? அது இன்றைய போட்டியிலும் நடந்தேறி விட்டது. கடந்த போட்டியில் நியூசி., கைவசம் 6 விக்கெட் இருந்தும் கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க முடியாமல் 8 ரன்களை மட்டும் எடுக்க போட்டி சமன் ஆனது. சூப்பர் ஓவரில் ரோகித்தின் கடைசி 2 பந்தில் 2 சூப்பர் சிக்சரால் இந்தியா வெற்றி பெற்றது.

 

இன்றைய போட்டியிலும் , அதே போன்ற மகா திருப்பம் அரங்கேறியது. கடைசி ஓவரில் நியூசி., வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தது. ஆனால் தாக்கூர் வீசிய இந்த ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 ரன்கள் மட்டுமே நியூசி., எடுக்க இன்றும் போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்கு செல்ல, நம்ப முடியாத வெற்றியை பதிவு செய்தது இந்தியா. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் புயல் பும்ரா பந்துவீச்சில் 13 ரன் எடுத்தது. இந்தியாவின் வெற்றிக்கு 14 ரன் தேவை என்ற நிலையில், நியூசி., வீரர் சவுத் தீ பந்து வீச, லோகேஸ் ராகுல் 6,4 என முதல் 2 பந்தில் 10 ரன் எடுத்து நம்பிக்கை கொடுத்து விட்டு 3-வது பந்தில் அவுட்டும் ஆனார். இனால் அடுத்து 3 பந்தில் 4 ரன் தேவை என்ற நிலையில் கோஹ்லி அடுத்தடுத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை தேடித் தந்தார்.


Leave a Reply