கொரானா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சீனாவில் உகான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் ஜம்போ பி 747 விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் அதிகாலை 4 மணியளவில் நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியாவின் ஜம்போ பி 747 விமானத்தில் 423 பேர் பயணம் செய்ய முடியும். இந்த விமானத்தில் சுகாதாரத் துறையை சேர்ந்த 5 மருத்துவர்களும், ஒரு உதவியாளரும் இருப்பார்கள் என ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.
உகான் விமானநிலையத்தில் இந்த விமானம் 2 முதல் மூன்று மணி நேரம் வரை பயணிகளுக்காக காத்திருக்கும் என்று அவர் தெரிவித்தார். பயணிகளுக்கான சேவைகள் எதுவும் விமானத்தில் வழங்கப்படாது என்றும், எனவே விமான சிப்பந்திகளுக்கும், பயணிகளுக்கும் எந்த தொடர்பும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயணிகளுக்கும் சிப்பந்திகளுக்கும் முகமூடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சிப்பந்திகளுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சீனாவின் மாகாணத்தில் வசிக்கும் அறுநூற்றுக்கும் அதிகமான இந்தியர்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு இந்தியா திரும்ப விரும்புகிறார்களா என கேட்டறிந்து உள்ளது.
இந்த விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவரும் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.