வட்டித் தொழில் செய்வதாக வருமான வரித்துறையிடம் கூறிய ரஜினி?

2002 ஆம் ஆண்டு முதல் சுமார் 66 லட்சம் ரூபாய் வருமானத்தை மறைத்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு திரும்பப்பெற பட்டிருக்கும் நிலையில் அவர் தான் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்ததாக வருமான வரித் துறையிடம் கூறி இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

 

வருமான வரித் துறையிடம் நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த ஆவணங்களில் 2002- 2003, 2003- 2004 ஆகிய ஆண்டுகளில் வட்டிக்கு கடன் கொடுத்ததன் மூலம் லாபம் பெற்றுள்ளதாக காரணம் காட்டி இருப்பதாக தெரிகிறது. இதன் பின்னர் 2004 – 2005 ஆம் ஆண்டில் சுமார் 1.71 கோடி ரூபாய் வாராக் கடனாக கணக்கு காட்டப்பட்டு இழப்பு கட்டப்பட்டதாக தெரிகிறது.

 

வாராக்கடனை கணக்கு காட்டுவதால் கிடைக்கும் பலனை பெறுவதற்காகவே நடிகர் ரஜினிகாந்த் தான் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்ததாக கூறி இருப்பதாக சந்தேகித்த வருமான வரித்துறையினர் அவரிடம் 2005ஆம் ஆண்டு பிப்ரவரியில் விசாரணை மேற்கொண்டனர்.

 

அந்த விசாரணையின் போது தான் சிலருக்கு கைமாற்றாக கடன் அளித்து இருப்பதாகவும், அதை வட்டிக்கு கடன் அளிக்கும் தொழிலாக கருத முடியாது என்றும் ரஜினி கூறியதாக தெரிகிறது. இதன்பின்னர் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலுக்கான உரிமத்தை ரஜினிகாந்த் பெறவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட வருமான வரித்துறையினர் அவர் நண்பர்களுக்கு கைமாற்றுக் கடன் கொடுத்து இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

 

இதன்பிறகு வருமான வரித் துறைக்கு கடிதம் எழுதிய ரஜினிகாந்த் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலைத்தான் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அடமானத்திற்கு கடன் வழங்குவதை மட்டும்தான் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் என தாம் நம்பி இருந்ததால் விசாரணையின்போது தவறான தகவலைத் தந்து விட்டதாகவும் ரஜினி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

இதைத்தொடர்ந்து 2004 – 2005 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில் ஏற்கனவே வாராக் கடனாக கணக்கு காட்டிய 1.71 கோடி ரூபாயை வசூலிக்க தான் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த ஆண்டுக்கான தமது வருவாய் 1.46 கோடி ரூபாய் என்றும் தெரிவித்தார்.

 

ஆனால் அவர் வட்டி தொழில் செய்வது வருவதாக கூறியதை ஏற்க மறுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவர் கைமாற்றாக கடனளித்ததாக கூறி அவ்வாறு வழங்கப்படும் கடன் மூலம் பெறப்படும் வட்டி பிற வழிகளில் பெறப்படும் வருவாயிலிருந்து தான் காட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்தனர்.


Leave a Reply