டெல்லியில் பாரதிய ஜனதா அரசு அமைந்தால் ஷாகின் பார்க் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவர் ஒரு மணிநேரத்தில் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று பாரதிய ஜனதா எம்பி ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள பகுதியில் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களுடன் தொடங்கிய போராட்டம் நாட்கள் செல்ல செல்ல தீவிரமடைந்தது. கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் முடிந்த பின்னரும், வேலைக்கு செல்வோர் பணி முடிந்த பிறகு ஷாகின் பார்க் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பரப்புரை மேற்கொண்டு வரும் மேற்கு டெல்லி பாரதிய ஜனதா எம்பி பர்வேஸ் வர்மா, ஷாகின் பார்க் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது டெல்லியில் பாரதிய ஜனதா அரசு அமைந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஷாகின் பார்க் பகுதியில் ஒருவரையும் பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
டெல்லியில் பாரதிய ஜனதா அரசு அமையும் பட்சத்தில் தேர்வு முடிவு வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு தனது தொகுதியில் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து மசூதிகளும் அகற்றப்படும் எனவும் எம்பி பர்வேஸ் வர்மா தெரிவித்துள்ளார். போராட்டம் நடைபெற்று வரும் ஷாகின் பார்க்கில் லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர்.
அவர்கள் பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்து யாரை வேண்டுமானாலும் பாலியல் வன்கொடுமை செய்யலாம், ஏன் கொலை கூட செய்யலாம் என்று பேசியுள்ளார். இதனிடையே ஷாகின் பார்க் போராட்டத்தில் தீயசக்திகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றாவிடில் போராட்டம் திசை மாறக் கூடும் என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா எச்சரித்துள்ளார்.