சிஏஏ-க்கு எதிரான வழக்குகள் : உயர் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் போடக்கூடாது..! உச்ச நீதிமன்றம் திடீர் தடை!!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உயர்நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிஏஏ-க்கு எதிரான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கும் மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அதற்கான மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி சட்டமாக்கி விட்டது.இந்த சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனக் கூறி, எதிர்க்கட்சிகள் கடும் தெரிவித்தன. நாடு முழுவதும் பெரும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
கேரளா, புதுச்சேரி, மே.வங்கம், பஞ்சாப் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், இந்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என அம்மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ, தமது முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே சிஏஏ-க்கு எதிராக நாடு முழுவதும் நீதிமன்றங்களில் ஏராளமாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது. பின்னர் சிஏஏ-க்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக 3 நீதிபதிகள் அமர்வு அறிவித்தது.
அத்துடன் சிஏஏ-க்கு எதிரான அனைத்து வழக்குகளும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டதால், பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் இச்சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




