1971ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் பேசவில்லை. பத்திரிகை செய்திகள் மற்றும் கேள்விப்பட்டது குறித்தே பேசினேன். இதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971-ல் சேலத்தில் நடந்த தி.க. மாநாடு குறித்து குறிப்பிட்டது சர்ச்சையாகி விட்டது. அந்த மாநாட்டு ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகளை நிர்வாணமாக கொண்டு சென்று செருப்பால் அடித்தனர் என்று ரஜினி பேசியதற்கு தி.க. மற்றும் பெரியார் இயக்க வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன் இல்லாத, நடைபெறாத சம்பவத்தை பேசிய ரஜினி மன்னிப்பு கோரவேண்டும். இல்லாவிட்டால் ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம். ரஜினியின் தர்பார் படத்தை ஓடவிட மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் ரஜினிக்கு எதிராக தமிழகத்தின் பல ஊர்களில் போலீசில் புகார்களும் செய்யப்பட்டன.

தாம் பேசியதற்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மவுனம் சாதித்து வந்தார் ரஜினி. இந்நிலையில் இன்று காலை தமது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி தனது மவுனத்தை கலைத்து துக்ளக் விழாவில் பேசியது குறித்து பரபரப்பாக விளக்கம் அளித்தார்.
துக்ளக் விழாவில் நான் பேசியது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 1971-ல் தி.க.மாநாட்டில் என்ன நடந்தது என்பது குறித்து, நான் இல்லாததை ஒன்றை எதுவும் பேசவில்லை. கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டதையும், பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையின் தான் நான் பேசினேன்.
(சில பத்திரிகை ஆதாரங்களை காட்டினார்).இதனால் சாரி.. நான் மன்னிப்பும் கேட்கப் போவதில்லை.. வருத்தமும் தெரிவிக்கப் போவதில்லை என தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன் என்று பளிச்சென கூறிவிட்டு விறுவிறுவென வீட்டிற்குள் சென்று விட்டார் ரஜினி.
பெரியார் குறித்து தான் பேசியதை நியாயப்டுத்தி ரஜினி கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






